2016-12-07 16:48:00

புனித அம்புரோஸ் திருநாளையொட்டி மிலான் பேராயரின் உரை


டிச.07,2016. "ஓர் ஆயர் தன் உள்ளத்தில் இருக்கும் எண்ணங்களை, அச்சமின்றியும், வெளிப்படையாகவும் பேசாமல் இருப்பது, இறைவனுக்கு முன்னும், மக்களுக்கு முன்னும் ஆபத்தானது" என்று புனித அம்புரோஸ் கூறிய வார்த்தைகளை, மிலான் பேராயர் கர்தினால் ஆஞ்செலோ ஸ்கோலா (Angelo Scola) அவர்கள், தான் வழங்கிய ஓர் உரையில் எடுத்துரைத்தார்.

மிலான் நகரின் புகழ்பெற்ற பேராயரும், கத்தோலிக்கத் திருஅவையின் மறைவல்லுநருமான புனித அம்புரோஸ் திருநாள், டிசம்பர் 7, இப்புதனன்று கொண்டாடப்பட்டதையொட்டி, மிலான் பேராலயத்தில், இச்செவ்வாய் மாலை உரை வழங்கிய கர்தினால் ஸ்கோலா அவர்கள், இவ்வாறு கூறினார்.

உண்மையான சுதந்திரத்தின் அடிப்படையில், மக்கள் அனைவருக்கும் சமமான, நலமான உரிமைகளை வழங்கும் ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்புவதே ஓர் ஆயரின் நோக்கம் என்பதை புனித அம்புரோஸ் உணர்ந்திருந்தார் என்பதை, தன் உரையில் குறிப்பிட்ட கர்தினால் ஸ்கோலா அவர்கள், அதே நோக்கம், இன்றும், ஓர் ஆயரிடம் காணப்படவேண்டும் என்று எடுத்துரைத்தார்.

பெல்ஜியம், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நிகழ்ந்த வன்முறைகளையும், பிரித்தானிய மக்கள் சந்தித்துள்ள Brexit அனுபவத்தையும் தன் உரையில் சுட்டிக்காட்டிய கர்தினால் ஸ்கோலா அவர்கள், நாம் எத்தகைய ஐரோப்பாவை உருவாக்க விழைகிறோம் என்ற கேள்வியையும் முன்வைத்தார்.

அழிவுகள் நடுவே, ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுவதும், போராட்டங்கள் நடுவே, நேர்மறையான உணர்வுகளை வளர்ப்பதும் ஐரோப்பாவின் அடிப்படை கலாச்சாரம் என்பதை, கர்தினால் ஸ்கோலா அவர்கள் தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

"மிலான் மற்றும் ஐரோப்பாவின் எதிர்காலம்" என்ற தலைப்பில், கர்தினால் ஸ்கோலா அவர்கள் வழங்கிய இவ்வுரை, கத்தோலிக்க தொலைக்காட்சி நிலையங்கள் வழியே நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.