2016-12-07 17:18:00

இத்தாலியிலேயே மிகப் பெரிய அளவில் கிறிஸ்து பிறப்பு காட்சி


டிச.07,2016. உரோம் நகரின் வில்லரேஜியா (Villaregia) என்ற பகுதியில், மனிதர்களைக் கொண்டு உருவாக்கப்படும் கிறிஸ்மஸ் குடில் காட்சிகள், பத்தாவது ஆண்டாக இவ்வாண்டும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 18ம் தேதி முதல், சனவரி 6ம் தேதி முடிய நடித்து காட்டப்படும் இந்தக் காட்சிகளில் 150க்கும் அதிகமான நடிகர்கள் பங்கேற்கின்றனர் என்றும், இயேசு பிறந்த காலத்தில், யூதேயா நாடு எவ்விதம் இருந்ததென்பது, இக்காட்சிகளில் உருவாக்கப்படும் என்றும் வில்லரேஜியா ஊராட்சி கூறியுள்ளது.

உலகெங்கும் சிறு சிறு துண்டுகளாக நிகழும் போர்களைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளதை மையப்படுத்தி, இவ்வாண்டு நிகழும் கிறிஸ்து பிறப்பு காட்சிகளில் உலகின் அமைதி என்பது மையக்கருத்தாக அமையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாசரேத்து கிராமத்தை போன்ற ஒரு சூழல், Monte Migliore என்ற பகுதியில் அமைக்கப்படும் என்றும், இந்தக் காட்சியைக் காண வருவோர், இந்தக் கிராமத்தின் வழியே நடந்து சென்று, கிறிஸ்து பிறப்பு நிகழ்வில் நேரடியாகப் பங்கேற்கலாம் என்றும் வில்லரேஜியா ஊராட்சி கூறியுள்ளது.

வில்லரேஜியா ஊர் சமுதாயம் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி, இத்தாலி நாட்டிலேயே மிகப் பெரிய அளவில் உருவாக்கப்படும் கிறிஸ்து பிறப்பு காட்சி என்றும், இம்முயற்சிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் வாழ்த்துக்களையும், ஆசீரையும் வழங்கியுள்ளார் என்றும் இவ்வூர் தலைவர்கள் கூறினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.