2016-12-05 15:07:00

வாரம் ஓர் அலசல் – பிரதிபலன் காட்டும் இரக்கம்


டிச.05,2016. வழக்கறிஞர் அப்ரோஸ் ஷா(Afroz Shah) அவர்கள், மும்பை வெர்சோவா(Versova)  கடற்கரை பகுதியில் வாழ்பவர். 36 வயது நிரம்பிய இவர், 2015ம் ஆண்டு அக்டோபரில், ஒருநாள், தனது வீட்டின் பால்கனியில் இருந்து, வெர்சோவா கடற்கரையைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவுகள், குடிநீர் பாட்டீல்கள், துணிகள், காலணிகள் என, பல்வேறு விதமாக குப்பைகள் குவிந்து, அக்கடற்கரையே, குப்பைக்கூளமாக இருந்ததைக் கண்டார். இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்யலாமா என்றால், அது, பலன் அளிக்காது என்பதை உணர்ந்து, இவரே களத்தில் இறங்க முடிவு செய்தார். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. இவரும், இவரது அண்டை வீட்டுக்காரரான, 84 வயது நிரம்பிய ஹார்பனாஷ் மாத்தூர்(Harbanash Mathur, 84) என்பவரும் சேர்ந்து, வெர்சோவா கடற்கரையைச் சுத்தம் செய்யும் பணியைத் தொடங்கினர். இப்பணிக்கு உதவியாக, இவ்விருவரும், விஆர்வி என்ற தொண்டர்கள் அமைப்பையும் ஆரம்பித்தனர். வாட்ஸ்அப் மூலமும், விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இவர்களது குழுவில் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் சேர்ந்தனர். இக்குழுவினர், அவரவர் நேரத்துக்கு ஏற்ப, ஒவ்வொரு வாரமும், தூய்மைப் பணியில் ஈடுபட்டு குப்பைகளைச் சேகரித்தனர். அந்த குப்பைகள் லாரிகள் மூலம் மாநகராட்சி குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டன. இதுவரை நான்காயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இக்குழுவினரின் விடா முயற்சியினால், 2.5 கி.மீ. நீளம் கொண்ட வெர்சோவா கடற்கரை, நாற்பத்தெட்டு வாரங்களில் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 03, கடந்த சனிக்கிழமையன்று, அப்ரோஸ் ஷா அவர்களுக்கு, “பூமியின் ஆதரவாளர்கள் (Champions of the Earth)” என்ற ஐ.நா. சுற்றுச்சூழல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. UNEP என்ற ஐ.நா. வின்  சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு உழைத்தவர்களுக்கென, இவ்வாண்டில், ஷா அவர்கள் உட்பட, ஐந்து பேருக்கும், ஒரு நிறுவனத்திற்கும் இவ்விருதை அறிவித்துள்ளது. கடந்த அக்டோபரில், ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்டத் தலைவர் எரிக் சோல்கைம்(Erik Solheim) அவர்கள், மும்பைக்கு நேரில் வந்து, அப்ரோஸ் அவர்களுடன் இணைந்து, தூய்மைப் பணியில் ஈடுபட்டார். உலகில் தூய்மைப்படுத்தப்பட்ட நீளமான கடற்கரை என்ற பெயரையும், வெர்சோவா  கடற்கரை பெற்றுள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய சிறையான, டெல்லி திஹார் சிறையில், பிளஸ் 2 மட்டுமே கல்வித்தகுதி கொண்ட, தொடக்கநிலை காவலர் மற்றும் வார்டன் பணிகளுக்கு, அண்மையில், ஏறக்குறைய 45,000 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களில், எழுத்துத் தேர்வு மற்றும் உடல் தகுதித் தேர்வில் வெற்றிபெற்று, நேர்முகத் தேர்வை எதிர்கொண்டதில், 59 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். இந்த 59 பேரில், 16 பேர் கணனி டிப்ளமோ பெற்றவர்கள். இவர்கள்தான் குறைந்த படிப்பு படித்தவர்களாக உள்ளனர். மற்றவர்கள், பொறியாளர்கள் மற்றும், எம்பிஏ, பிஎட் பட்டதாரிகள். மாதம் 21 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊதியமாகக் கிடைக்கும் இந்தப் பணியில், இவர்கள் சேர்ந்ததற்கு, சிலருக்கு, வேலைவாய்ப்பின்மையும், வேறு சிலருக்கு, நாட்டுக்குச் சேவையாற்றும் நோக்கங்களும் காரணமாக உள்ளன. இது குறித்து திஹார் சிறையின் இயக்குநர் ஜெனரல் சுதீர் யாதவ் கூறும்போது,

இங்கு புதிதாகப் பணியில் சேர்ந்துள்ள பட்டதாரிகள், தங்கள் பணிகளுடன் நின்றுவிடுவதில்லை. தங்கள் கல்வி வீணாகக் கூடாது என்று கருதும் இவர்கள், இதற்காக உழைக்க, சிறிதும் தயக்கம் காட்டுவதில்லை. தாங்களாக முன்வந்து, அஞ்சல்வழி கல்வி பயிலும் கைதிகளுக்கு அன்றாடம் பாடம் சொல்லித் தருகின்றனர். இதேபோல், எம்பிஏ படித்தவர்கள், சிறைக் கைதிகளால் நடத்தப்படும் தொழிற்கூடங்களை நிர்வகிப்பதில் உதவி புரிகின்றனர். இத்துடன், சிறையின் நிர்வாகப் பணிகளிலும் பல்வேறு வகையில் உதவி வருகின்றனர் என்று, திஹார் சிறையின் இயக்குநர் சொல்லியுள்ளார்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில், நாம் சில சிலைகளைக் கைவிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். எந்த வழியிலும் வெற்றியைக் கைப்பற்றத் துடிப்பது, நலிந்தோரை துன்புறுத்தி, அதிகாரத்தைக் கைப்பற்றுவது, செல்வத்தைப் பெற தாகமாயிருப்பது, எந்த விலை கொடுத்தும் இன்பத்தை அனுபவிப்பது போன்ற சிலைகளைக் கைவிடுமாறும், இச்சிலைகள், அலகைக்குரியவை என்றார் திருத்தந்தை.

 

இன்று, உலகில், பணம், பதவி, அதிகாரம், செல்வாக்கு போன்றவைகளுக்காக ஏங்கும் மனிதர்கள், இந்த மோகத்தில் வாழ்பவர்கள், ஏழை எளிய மக்களின் துன்பங்களை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர். பழைய ரூபாய்த் தாள்களை மாற்றுவதற்காகக் காத்திருந்த ஒரு முதியவர், அந்த இடத்திலே மயங்கி விழுந்து இறந்துவிட்டார் என்ற செய்தி இதற்கு ஒரு சான்று. தவறான பாதைகளில் இட்டுச்செல்லும் இந்தச் சிலைகளைக் கொண்டிருப்போர் மத்தியில், பொது நலத்திற்காக, தன்னலமற்ற சேவையாற்றும், மும்பை அப்ரோஸ் ஷா, திஹார் சிறையில் புதிதாகச் சேர்ந்துள்ள பட்டதாரிப் பணியாளர்கள் போன்ற நல்ல உள்ளங்கள், எல்லாருக்குமே எடுத்துக் காட்டாய் விளங்குகிறார்கள். இந்த நல்ல மனிதர்களின் பட்டியல் நீண்டுகொண்டேதான் செல்கிறது.

தாயை இழந்த பட்டதாரி இளைஞர் ஒருவர், வேலை தேடி ஏறாத படிகள் இல்லை. ஏறக்குறைய பதினைந்து நேர்காணல் தேர்வுகளுக்குச் சென்றிருந்த அவர், எதிலும் தேர்வாகவில்லை. கடந்த வாரத்தில், அவர் ஒரு நேர்காணலுக்குச் சென்று, அதில் தேர்ச்சி பெறாமல், மனம் நொந்து வீட்டுக்குப் போனார். அவருடைய சித்தி, அதாவது,  அவர் அப்பாவின் இரண்டாவது மனைவி, அவரைப் பார்த்து, ‘வெட்டியா ஊரைச் சுத்திட்டுவர தண்டக் கழுதைங்களுக்கெல்லாம் என்னால வடிச்சுக் கொட்ட முடியாது..’ என்று வாயில் வந்தபடி திட்டியிருக்கிறார்கள். இவர் ஆத்திரத்தில் அடிக்கப் போய்,  அவரின் அப்பா அவரைத் தடுத்து, அவரைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டுள்ளார். மனம் வெறுத்துப்போய், அந்த இளைஞர், தன் நண்பர் ஒருவருக்குத் தொலைபேசியில், விடயத்தைச் சொல்லி, ‘எல்லாரையும் கேட்டதாய்ச் சொல்! நான் உலகத்தில் வாழவே தகுதியில்லை. தற்கொலை பண்ணிக்கொள்வதாக உள்ளேன் என்று அழுதுகொண்டே தொலைபேசியைத் துண்டித்துள்ளார். அந்த நண்பர், மற்ற நான்கு நண்பர்களுக்கும் தகவல் சொல்ல, எல்லாரும் பதறிப்போய் உடனடியாக அவர் வீட்டுக்கு ஓடினார்கள். நல்லவேளை, விபரீதமாக எதுவும் நடப்பதற்கு முன்னே, அவரைக் காப்பாற்றி, தங்களோடு அழைத்து வந்துள்ளனர்.

தேர்வில் தோல்வி, மதிப்பெண் அதிகம் கிடைக்கவில்லை, ஆசிரியர் திட்டினார், மேலதிகாரி அவமானப்படுத்தினார், கடன் சுமை, தலைவர் கைது, அபிமான நாயகருக்கு உடல்நலக் குறைவு ... இப்படி எல்லாவற்றுக்கும் தீர்வு தற்கொலைதானா? வேறு வழியே இல்லையா? தற்கொலை பண்ணிக்கொள்கின்ற எண்ணம் வந்ததும், உடனே அதற்கான செயலில் இறங்காமல், ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு, அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து, மூச்சை ஆழமாக இழுத்து நிதானமாக விட்டு, மனதை அலைபாயவிடாமல் ஒரு நிமிடம் நிலைநிறுத்தி வைத்திருந்தால், நூற்றுக்குத் தொண்ணூறு தற்கொலைகள் தவிர்க்கப்படும் என்று, ஓர் உளவியல் நிபுணர் சொன்னதாக வாசித்தோம். நாம் இங்கு இப்போது சொல்ல வருவது தற்கொலைப் பிரச்சனைக்குத் தீர்வு அல்ல. ஆனால், பிரச்சனையில் இருப்பவர்களுக்கு உதவும் நல் உள்ளங்கள் பற்றியே. இன்றுகூட, கண்ணீரை வரவழைக்கும் ஒரு காணொளியைக் காண நேர்ந்தது.  

திருமண விருந்து நடந்து கொண்டிருந்த அந்த இடத்திற்கு, ஒரு பிச்சைக்கார முதியவர் கையில் தட்டோடு, தடுமாறி தடுமாறி உள்ளே வந்தார். அவரைப் பார்த்த ஒரு வெள்ளை வேட்டிக்காரர், அவரை விரட்டி விட்டார். அங்கு நின்ற ஒரு சிறுமி, அந்த நிகழ்வைப் பாரத்துக்கொண்டே இருந்தார். அந்த முதியவர் மீண்டும் தட்டோடு அந்தத் திருமண வீட்டிற்குத் தயங்கித் தயங்கிச் சென்றார். இரண்டாவது தடவையும், அதே வெள்ளை வேட்டிக்காரர், அந்த முதியவரை மிகவும் கடுமையாகத் திட்டி விரட்டினார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த அச்சிறுமி, பந்தியில் உணவு பரிமாறுகின்றவர்களிடம் ஒரு தட்டை நீட்டி, உணவைப் பெற்று, சாலையோரத்தில் அமர்ந்திருந்த அந்த முதியவரிடம் கொடுத்தார். ஆசையோடு, அவசர அவசரமாக, அந்த உணவை உண்ட முதியவரைப் பார்த்துக்கொண்டிருந்தார் சிறுமி. முதியவருக்கு விக்கல் எடுத்தது. தண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமிக்கு எதிரே வந்தார் அந்த வெள்ளை வேட்டிக்காரர். சிறுமியையே பார்த்த அவர், பின்னர் சிறுமியைத் தட்டிக்கொடுத்து, கையிலிருந்த தண்ணீர் டம்ளரையும் கொடுத்தார்.

நாம் செய்யும் சிறு உதவியும் வீணாகப் போவதில்லை. அது அடுத்தவரின் மனதை மாற்றி நன்மை செய்யவும் தூண்டுகின்றது. தன்னலமற்ற எந்த ஒரு செயலுக்கும் பயன் உண்டு, என்று சொல்வார்கள். சிங்கம், சுண்டெலி கதை நமக்குத் தெரியும். கடும் கோடை வெயிலில், ஒரு பெரிய மரத்தின் நிழலில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தது சிங்கம். அப்போது, அந்த மரப்பொந்திலிருந்து வெளியே வந்த சுண்டெலி, சிங்கத்தின் முதுகில் ஏறி விளையாடி, அதை எழுப்ப முயற்சித்தது. சுண்டெலி, இதை ஒரு விளையாட்டாகவே செய்தது. ஆனால், சிங்கம் கோபமடைந்து அதனை விழுங்க வாயைத் திறந்தது. அப்போது சுண்டெலி கெஞ்சியது. நீர் இப்போது இரக்கம் காட்டும். இந்த இரக்கத்திற்கு நான் கைம்மாறு செய்கிறேன் என்றது. சிங்கமும் விட்டுவிட்டது. சிலநாள்கள் கழித்து, அதே மரத்தடியில், சிங்கம் ஒரு வேடரின் வலையில் மாட்டிக்கொண்டது. அப்போது சுண்டெலி, அந்த வலையை அறுத்து சிங்கத்தை விடுவித்தது. இது கதைதான் என்றாலும், கதை சொல்லும் கருத்து ஏற்பதற்குரியது. ஆம். நாம் செய்யும் ஒரு சிறிய நன்மைக்கும் பிரதிபலன் உண்டு. நாம் காட்டும் இரக்கம், பெய்யும் மழைபோன்று, ஒருபோதும் பலனின்றி இருக்காது. சமநிலையில் இருக்கும் ஒருவரால்தான் இரக்கம் காட்ட முடியும் என்று பகவத் கீதை சொல்கிறது. சமநிலை என்பது, இதயம், மனம், மூளை, உடல், ஆன்மா என, இந்த ஐந்தும் சமநிலையில் இருப்பது. இதயத்தில் அன்பு இல்லாதபோது, மனம் மன்னிக்காதபோது, மூளை, ஞானத்தை இழக்கும்போது, உடல் அர்ப்பணத்தை இழக்கும்போது, ஆன்மா நீதியை இழக்கும்போது கலக்கம் அடைகின்றன எனச் சொல்லப்படுகின்றது. எனவே, இதயத்தில் இரக்கத்தை சுரக்கவைத்து, தன்னலமற்ற தொண்டில் நம்மை ஈடுபடுத்துவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.