2016-12-03 15:49:00

திருவருகைக்காலம் - 2ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


75 ஆண்டுகளுக்கு முன், 1941ம் ஆண்டு, டிசம்பர் 7ம் தேதி, ஜப்பானிய விமானங்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் ‘Pearl Harbour’ என்றழைக்கப்படும் பவளத் துறைமுகத்தின்மீது தாக்குதல் நடத்தின. அதுவரை, 2ம் உலகப்போரில் நேரடியாக ஈடுபடாத அமெரிக்க ஐக்கிய நாடு, இத்தாக்குதலுக்குப்பின் முழு வீச்சுடன் இப்போரில் ஈடுபட்டது. அதன் விளைவாக, ஜப்பான் மீது, அணுகுண்டு தாக்குதல்களை நடத்தியது.

இத்தாக்குதலின் 75ம் ஆண்டு நினைவாக, வாஷிங்டன் மாநகரில், ‘Newseum’ (News+museum) என்றழைக்கப்படும் கண்காட்சியில், டிசம்பர் 5ம் தேதி முதல் 11ம் தேதி முடிய, Pearl Harbour அனுபவத்தை ஒருவர் நேரில் அடையமுடியும் என்று, விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. உலகில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளில் நேரடியாகக் கலந்துகொள்ளும் ஒரு மாய உணர்வை உருவாக்கும், மெய்நிகர் உண்மை (Virtual Reality) என்ற தொழில் நுட்பத்தை, வியாபார உலகம், சில ஆண்டுகளுக்குமுன் அறிமுகப்படுத்தியது. இத்தொழில்நுட்பத்தின் உதவியுடன், பார்வையாளர்கள், 75 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்லப்படுகின்றனர். இன்னும் சில மாதங்களில், இந்தக் கண்காட்சியில், பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட வரலாற்று நிகழ்விலும், மக்கள் கலந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு, மேற்கு, என்று, ஜெர்மனியை, இரு நாடுகளாகப் பிரித்து வைத்திருந்த பெர்லின் சுவர், 1989ம் ஆண்டு இடிக்கப்பட்டதால், ஜெர்மனி, ஒரே நாடாக இணைந்தது. மக்களின் முயற்சியால் ஏற்பட்ட ஒரு பெரும் சமுதாயப் புரட்சி இது என்று, வரலாறு சொல்கிறது. இடிக்கப்பட்ட அந்தச் சுவர், சிறு சிறு துண்டுகளாக்கப்பட்டு, நினைவுப் பொருள்களாக விற்பனை செய்யப்பட்டன. பெர்லின் சுவர் என்று சொல்லி, போலித் துண்டுகளும் விற்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

2001ம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி, நியூயார்க் நகரில் உலக வர்த்தகக் கோபுரங்கள் இரண்டும், விமானங்களால் தாக்கப்பட்டு, இடிந்து விழுந்தன. அமெரிக்க வரலாற்றைக் காயப்படுத்திய ஒரு நிகழ்வு இது என்று கூறப்பட்டது. இக்கோபுரங்களின் இடிபாடுகளும் நினைவுப் பொருள்களாக விற்பனை செய்யப்பட்டன.

2010ம் ஆண்டு, அக்டோபர் மாதம், ஆஸ்திரேலியாவின் முதல் புனிதராக மேரி மெக்கில்லாப் (St.Mary MacKillop) உயர்த்தப்பட்டார். அப்புனிதரின் உருவத்தை, நினைவுப் பொருள்களாக விற்பதில், ஆஸ்திரேலிய அரசுக்கும், வர்த்தகர்களுக்கும் இடையே, மோதல்கள் ஏற்பட்டன.

உலகப்போர், சமுதாயப் புரட்சி, தீவிரவாதத் தாக்குதல், புனிதராகும் திருச்சடங்கு என்று இவ்வுலகில் எது நடந்தாலும், அதை எவ்விதம் விற்பனை செய்யமுடியும் என்பதில், வர்த்தக உலகம் தீவிர முயற்சிகள் மேற்கொள்கிறது. ஐம்புலன்களால் உணரக்கூடிய நினைவுப் பொருள்கள் வழியாகவும், ஐம்புலன் உணர்வை உருவாக்கக் கூடிய மெய் நிகர் உண்மை என்ற தொழில்நுட்பம் வழியாகவும், மனிதரின் வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தையும், விற்பனைப் பொருளாக மாற்றுவது, வியாபார உலகத்தின் கட்டுக்கடங்காத பேராசையைக் காட்டுகிறது. அனைத்தையும் விற்பனைப் பொருளாக்கும் இப்போக்கு, வர்த்தக உலகைத் தாண்டி, மதம், கல்வி, நலவாழ்வு, என்ற அனைத்திலும் ஊடுருவியிருப்பது, கவலைதருகின்றது.

மதம் சார்ந்த நமது விழாக்கள் அனைத்தும் வியாபாரமயமாகி வருகின்றன. சமய விழாக்களை நாம் எவ்வகையில் கொண்டாட வேண்டும் என்று, வியாபார உலகம் வழி காட்டுகிறது. வியாபார உலகம் சொல்லித்தரும் வழிகள், நம் வாழ்வை இதமாகக் கொண்டு செல்லும் வழிகள். சமய விழாக்களின் அடிப்படையாக விளங்கும் உண்மைகள், சவால்கள் நிறைந்தவை என்பதால், அவற்றைப் பற்றிய எண்ணங்கள் எதையும் உருவாக்காமல், நமது சமய விழாக்களை பொழுதுபோக்கு அம்சங்களால் நிறைப்பது, வர்த்தக உலகின் குறிக்கோளாக விளங்குகிறது.

வியாபார உலகம் சொல்லித்தரும் வழிகளுக்கு ஒரு மாற்றாக, இன்றைய முதல் வாசகமும், நற்செய்தியும், நமக்கு, சில நேரிய, உன்னத, பாடங்களைச் சொல்லித் தருகின்றன. வியாபார உலகத்தின் கூச்சல்களையெல்லாம் மீறி, இந்தப் பாடங்கள் நம் மனதை சென்றடைய வேண்டும். முயல்வோமா?

"அவசரப்பட்டு கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை ஆரம்பிக்காதீர்கள், தயவுசெய்து, டிசம்பர் 24 இரவு வரை காத்திருங்கள்" என்று அமெரிக்க ஆயர் ஒருவர், சில ஆண்டுகளுக்கு முன், தன் மறைமாவட்ட மக்களுக்கு ஒரு வேண்டுகோள் மடலை அனுப்பினார். ஆயர் அனுப்பிய அந்த வேண்டுகோளை, வியாபார உலகின் பிடியிலிருந்து கிறிஸ்மஸ் விழாவை விடுதலை செய்யும் ஒரு முயற்சியென்று பாராட்டலாம். (Meaning of season lost by rushing Christmas celebration, bishop says - Catholic News Service)

ஆயர் அவர்கள், இவ்வாறு சொன்னதற்குக் காரணம் என்ன? அமெரிக்காவில், ஒவ்வோர் ஆண்டும், நவம்பர் மாதத்தின் 4வது வியாழன், ‘நன்றியறிதல் நாள்’ என்று கொண்டாடப்படும். இறைவன் அளித்த நல்ல அறுவடைக்கு நன்றி சொல்லும் நாளாக, இந்நாளை, மக்கள் கொண்டாடிவந்தனர். ஆனால், வியாபார உலகம், விரைவில், இந்நாளை, ஒரு விடுமுறை கொண்டாட்டமாக மாற்றிவிட்டது. தற்போது, இந்த நன்றியறிதல் நாள், எவ்வித மத உணர்வும் இன்றி கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த விழா முடிந்த கையோடு, வியாபார உலகம், கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களைத் துவக்கிவிடும். வியாபார உலகம் ஆரம்பித்து வைக்கும் இந்த கிறிஸ்மஸ் விழாவை, ஆடம்பரமாக, ஆர்ப்பாட்டமாக கொண்டாடச்சொல்லி, விளம்பரங்கள் தூண்டிவிடும். இந்தத் தூண்டுதலுக்கு இணங்க, ஒரு மாத அளவு கொண்டாடிவிட்டால், டிசம்பர் 24ம் தேதி இரவு, உண்மையான கிறிஸ்மஸ் வரும்போது, நாம் அனைவரும் களைத்துப் போய்விடுவோம் என்ற அக்கறையுடன், ஆயர் அவர்கள், அந்த எச்சரிக்கையைத் தந்தார். களைத்துமட்டும் போய்விட மாட்டோம், கலைந்தும் போய்விடுவோம். வியாபார உலகம் விரிக்கும் மாய வலைக்குள் அகப்பட்டு, ஒவ்வொரு திருநாளின் உட்பொருளை விட்டுக் கலைந்து, வேறு வழிகளில் நம் மனங்கள் சிந்திக்கின்றன என்பது, வேதனையான உண்மை.

கிறிஸ்து பிறப்பு விழாவின் உண்மைப் பொருளை உணர்வதற்கு நமக்குத் தரப்பட்டுள்ள ஒரு நல்ல காலம், திருவருகைக் காலம். வீட்டு அலங்காரம், புத்தாடைகள், வண்ண விளக்குடன் கூடிய விண்மீன்கள், கிறிஸ்மஸ் மரம், பரிசுகள் என்று, விளம்பரங்கள் விரித்துள்ள வலையில் சிக்கி, இத்திருவருகைக் காலத்தை நாம் ஆரம்பித்திருந்தால், அந்த வலையிலிருந்து விடுதலை பெற்று, உண்மையான கிறிஸ்மஸ் விழாவின் பொருளை உணர்வதற்கு, இன்றைய ஞாயிறு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.

இன்றைய நற்செய்தியில், திருமுழுக்கு யோவானை நாம் சந்திக்கிறோம். அவர் இன்றைய நற்செய்தியில் சொல்லியிருக்கும் வார்த்தைகள் அனைத்தும், அப்பட்டமான உண்மை. எந்தவித இனிப்பும் கலக்காத, கசப்பான உண்மை. கசப்பான மருந்து. வியாபார உலகம் உருவாக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைகளில், திருமுழுக்கு யோவான் கூறியுள்ள வார்த்தைகள் இடம் பெறமுடியுமா என்று சிந்தித்துப் பார்த்தேன். ஊஹூம்... வாய்ப்பே இல்லை. இத்தகைய உண்மைகளை மறைத்து, அந்த உண்மைகளைச் சொல்பவர்களை மறைத்து, மற்ற கனவு நாயகர்களை, அவர்கள் சொல்லும் விளம்பர வரிகளை நம் மனங்களில் பதிய வைப்பதுதானே, வியாபார உலகின் விருப்பம்.

“கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை இவ்வளவு சீக்கிரம் ஆம்பிக்காதீர்கள்” என்று சொன்ன ஆயர் அவர்களை, வாய்ப்பு கிடைத்தால், வியாபார உலகம் கடத்திக் கொண்டுபோய், கிறிஸ்மஸ் முடியும்வரை கண்காணாத இடத்தில் வைத்துவிடும். கசப்பான உண்மைகளைச் சொன்ன திருமுழுக்கு யோவானை, யூத மதத் தலைவர்கள், இந்த உலகை விட்டே அனுப்பத் துடித்தார்கள். ஏரோது மன்னன் வழியே, விரைவில், அனுப்பியும் விட்டார்கள். உண்மையைச் சொல்லும் எந்த இறைவாக்கினருக்கும் ஊரில் நல்ல பெயர் இருந்ததில்லையே! ஆனால், உண்மையைச் சொல்லி, உலகில் நன்மையை வளர்க்கும் இறைவாக்கினர்கள் நமது உலகிற்கு தேவை.

இறைவனின் பக்கம் நம்மை வழி நடத்தும் இறைவாக்கினர்கள், இறைப்பணியாளர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருப்பார்கள்; அவர்கள் உலகில் இருந்தால் இவ்வுலகம் எவ்வளவு அழகாக மாறும் என்பனவற்றை இறைவாக்கினர் எசாயா ஒரு அழகியக் கனவாகத் தந்திருக்கிறார், இன்றைய முதல் வாசகத்தில். இந்த வரிகளுக்கு விளக்கமே தேவையில்லை. எசாயாவின் இந்தக் கனவு, இன்று, நாம் வாழும் உலகில் நடைமுறையாக வேண்டும் என்ற ஏக்கத்தோடு இந்த வரிகளைக் கேட்போம்.

இறைவாக்கினர் எசாயா 11: 1-10

ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு - இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும். அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் மகிழ்ந்திருப்பார். கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்கார்: காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்புச் செய்யார்: நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்: நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார்: வார்த்தை எனும் கோலினால் கொடியவரை அடிப்பார்: உதட்டில் எழும் மூச்சினால் தீயோரை அழிப்பார். நேர்மை அவருக்கு அரைக்கச்சை: உண்மை அவருக்கு இடைக்கச்சை.

இத்தகைய நேரியவர்கள் வாழும் நாட்டில் என்ன நடக்கும் என்பதையும் இந்தக் கனவில் தொடர்ந்து கூறுகிறார் இறைவாக்கினர் எசாயா:

அந்நாளில், ஒநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்: கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும்: பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும். பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்: அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்துக்கிடக்கும்: சிங்கம் மாட்டைப் போல் வைக்கோல் தின்னும்: பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும்: பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும். என் திருமலை முழுவதிலும் தீமை செய்வார் எவருமில்லை: கேடு விளைப்பார் யாருமில்லை: ஏனெனில், கடல் தண்ணீரால் நிறைந்திருக்கிறது போல, மண்ணுலகம் ஆண்டவராம் என்னைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்.

 அன்புள்ளங்களே, வியாபார உலகம், விளம்பர உலகம் காட்டும் பல கனவுகளை, நமது திரைப்படங்களில், நாயகர்கள் சொல்லும் வசனங்களை, செய்யும் சாகசங்களைக் கண்டு, இவை உண்மையாகக் கூடாதா என்று எங்கும் நாம், இறைவாக்கினர் எசாயாவின் கனவையும் ஏன் அப்படி நினைத்து ஏங்கக்கூடாது? ஏங்குவோம். உலகில் நல்லவை நடக்க வேண்டும் என்று, ஏங்குவோம்.

நல்லவை நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நாம் துவங்கியுள்ள திருவருகைக் காலத்தில் நமக்குச் சிறந்த வழிகாட்டியாக விளங்குபவர், அன்னை மரியா. அவர், மீட்பரின் வருகையை, அர்த்தமற்ற வழிகளில் எதிர்பார்க்காமல், தனக்குள் துவங்கும் மாற்றங்களாக எதிர்பார்த்துக் காத்திருந்தார். அன்னை மரியா, மாசற்ற வகையில் தன் தாயின் கருவில் உருவானதை, அமல அன்னை திருநாள் என்று வருகிற வியாழனன்று நாம் கொண்டாடவிருக்கிறோம்.

சென்ற ஆண்டு, டிசம்பர் 8, அமல அன்னை திருநாளன்று, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டினை நாம் துவக்கினோம். யூபிலி ஆண்டு முடிவுற்றாலும், இரக்கத்தின் புனித காலம் தொடரவேண்டும் என்பது, இத்திருவருகைக் காலத்தில் நம் செபமாக அமையவேண்டும். அமல அன்னையின் பரிந்துரையாலும், வழிநடத்துதலாலும், நாம், திருவருகைக் காலத்தின், கிறிஸ்மஸ் பெருவிழாவின் முழுப்பொருளை உணர்ந்துவாழும் வரம் வேண்டுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.