2016-12-03 14:59:00

கடவுளின் அன்புச் செய்தியை வழங்கும், மறைப்பணியாளர்களாக...


டிச.03,2016. "வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் இருக்கின்ற, ஒவ்வொரு மனிதருக்கும், கடவுளின் அன்புச் செய்தியை வழங்கும், மறைப்பணியாளர்களாக செல்வதற்கு, நாம் அழைப்புப் பெற்றுள்ளோம்" என்ற சொற்கள், இச்சனிக்கிழமையன்று திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாயின. 

மேலும், உயிரூட்டமுள்ள, புதிய பாலியல் கல்விமுறையை, வத்திக்கான் ஆரம்பித்துள்ளது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, ஓர் ஊடகத்திடம் பேசிய, திருப்பீட குடும்ப அவையின் பேரருள்திரு Carlos Simon Vazquez அவர்கள், பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்த வாழ்வின் கொடை வழியாக, பிள்ளைகளுக்கு கல்வி வழங்குவதற்கு, அவர்களுக்கு முக்கிய கடமை உள்ளது என்று கூறினார்.

வாழ்வின் கொடையைப் பெறுவது என்பது, புதிய தலைமுறைகளுக்கு கல்வி வழங்குவதும் ஆகும் எனவும், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம், இளையோர்க்கு கல்வி வழங்குவது பற்றி வலியுறுத்திப் பேசியுள்ளது எனவும் கூறினார் பேரருள்திரு Simon Vazquez.

வத்திக்கான் தொடங்கியுள்ள, புதிய பாலியல் கல்வித் திட்டம், முதலில், இஸ்பெயின் நாட்டுத்  தம்பதியர் குழுக்களால் உருவாக்கப்பட்டது. இத்திட்டம், முதலில், இஸ்பெயின் ஆயர் பேரவையிலும், பின்னர், 2015ம் ஆண்டின் உலக குடும்பங்கள் மாநாட்டிலும், அடுத்து, 2016ம் ஆண்டில், கிராக்கோவில் நடந்த உலக இளையோர் மாநாட்டிலும் சமர்ப்பிக்கப்பட்டது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.