2016-12-02 15:53:00

நவீன அடிமைமுறைகள் ஒழிக்கப்பட திருத்தந்தை வேண்டுகோள்


டிச.02,2016. "மனித வர்த்தகம் மற்றும், அடிமைமுறையின் புதிய வடிவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, நன்மனம் கொண்ட அனைத்து மனிதருக்கும் விண்ணப்பிக்கின்றேன்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக, இவ்வெள்ளியன்று வெளியாயின.  

டிசம்பர் 02, இவ்வெள்ளியன்று, உலக அடிமைமுறை ஒழிப்பு நாள் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியும், இந்த உலக நாளையொட்டியதாக அமைந்திருந்தது. நவீன அடிமைமுறைகளை ஒழிக்கும் நோக்கத்தில், இந்த உலக நாளை, ஐக்கிய நாடுகள் நிறுவனம் உருவாக்கியுள்ளது. 

மேலும், ஒரு பயங்கரமான அரிய நோயினால் இறந்த பத்து வயது இத்தாலியச் சிறுமி பவ்லினாவுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய கடிதம், அச்சிறுமியின் அடக்கத் திருப்பலியில் வாசிக்கப்பட்டது.

இத்தாலியின் மாசாப்ரா நகரில், புனித லியோபோல்டு மாந்திச் ஆலயத்தில்,  இவ்வியாழனன்று, நடைபெற்ற, இச்சிறுமியின் அடக்கத் திருப்பலியில்,  திருத்தந்தையின் கடிதத்தை, பங்குத்தந்தை வாசித்தார்.

சிறுமி பவ்லினாவின் நோய் குறித்தும், அச்சிறுமியை ஆசீர்வதித்து, அச்சிறுமிக்காகச் செபிக்குமாறும், அச்சிறுமியின் அன்னை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு எழுதிய கடிதத்திற்கு, திருத்தந்தை எழுதிய பதில் கடிதம் இது.

மாசாப்ரா நகர மேயர் உட்பட ஏராளமான மக்கள் இத்திருப்பலியில், கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.