2016-12-01 15:12:00

திருத்தந்தை: அருளைப் பெறுவதற்கு உள்ளங்களில் மறுப்புகள்


டிச.01,2016. அருளைப் பெறுவதற்கு நம் உள்ளங்களில் மறுப்புகள் உள்ளன, எனவே, நாம் பாவிகள் என்பதை உணர்ந்து, இறைவனின் உதவியை பெற செபிக்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலையில் வழங்கிய மறையுரையில் கூறினார்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில், "உம் அருள், பாவம் என்ற மறுப்பை  வெல்லும்" என்று துவக்க செபத்தில் கூறப்பட்டுள்ள வார்த்தைகளை மையப்படுத்தி, தன் மறையுரையின் சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை.

நம் உள்ளத்தில் உள்ள மறுப்புகள் பலவகை என்று கூறியத் திருத்தந்தை, நல்ல கருத்துக்களுக்காக, நேரடியாக, வெளிப்படையாக உருவாகும் மறுப்புகள், ஒருவகையில் நல்லவை என்பதை எடுத்துரைத்து, அதற்கு, புனித பவுலின் உள்ளத்தில் உருவாகியிருந்த மறுப்பை எடுத்துக்காட்டாகக் கூறினார்.

இதற்கு மாறாக, மறைமுகமாக எழும் மறுப்புகள் ஆபத்தானவை என்பதை குறிப்பிட்டு, இறைவார்த்தையை கேட்க மறுக்கும் செவியும், ஏற்க மறுக்கும் உள்ளமும் கொண்டோர் என்று புனித ஸ்தேவான், இஸ்ரயேல் தலைவர்களை கடிந்துகொண்டதை எடுத்துக்காட்டாகச் சுட்டிக்காட்டினார், திருத்தந்தை.

மறைமுகமான இந்த மறுப்பு நம் உள்ளங்களில் புதைந்திருக்கும்போது நாம் "ஆண்டவரே, ஆண்டவரே" என்று வார்த்தைகளால் கூறுவது மட்டும் நமக்கு மீட்பளிக்காது என்று தன் மறையுரையில் எச்சரிக்கை விடுத்தார், திருத்தந்தை.

இறைவனை வரவேற்பதற்கு நம்மிடம் உள்ள மறைமுகமான மறுப்புக்களை விலக்கிவிட்டு, நாம் பாவிகள் என்பதை உணர்ந்து, அவரை வரவேற்கும் உள்ளம் பெறவேண்டும் என்று மன்றாடுவோம் என்று திருத்தந்தை தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.