2016-12-01 15:22:00

அதிக நலமிக்க சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதே குறிக்கோள்


டிச.01,2016. இன்னும் அதிக நலமிக்க சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதே அனைவரின் குறிக்கோளாக இருக்கவேண்டும், சிறப்பாக, இளையோர் இத்திசையில் செல்வது மிகவும் அவசியம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகக் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளிடம் கூறினார்.

மேய்ப்புப்பணி திருப்பீட அவை, நவம்பர் 28, கடந்த திங்கள் முதல், டிசம்பர் 2, இவ்வெள்ளி முடிய உரோம் நகரில் நடத்திவரும் 4வது உலகக் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் பன்னாட்டு மாணவர்கள் உட்பட, 150க்கும் அதிகமான பிரதிநிதிகளை, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "இன்னும் அதிக நலமிக்க சமுதாயம்" என்ற தலைப்பை அவர்கள் தேர்ந்திருப்பது குறித்து தன் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

நன்னெறி குறித்த போராட்டத்தில் இளையோர் சந்திக்கும் சவால்கள் மிக அதிகம் என்று கூறியத் திருத்தந்தை, இறைவனின் துணையோடும், நன்மை செய்யவேண்டும் என்ற உண்மையான மனதோடும், இச்சவால்களை இளையோர் எதிர்கொள்ளவேண்டும் என்று பன்னாட்டுப் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார்.

தங்கள் திறமைகளை முழுமையாக உணர்வதே உண்மையான அறிவாளிகளின் இலக்கணம் என்று வலியுறுத்திவரும் இவ்வுலகச் சூழலில், அடுத்தவரைப் பற்றிய அக்கறையும் தேவை என்று நாம் வலியுறுத்த வேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, இத்தகைய அறிவுத் திறனே, இவ்வுலகில் நன்மைத்தனத்தையும், அமைதியையும் உருவாக்கும் என்று வலியுறுத்தினார்.

மதம், மொழி, கலாச்சாரம் என்ற அனைத்து தளங்களிலும் பன்முகத் தன்மை கொண்ட இவ்வுலகில், சந்திக்கும் மனப்பான்மையை வளர்ப்பது, இளையோரின் அவசியத் தேவை என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

அதிகாரத்திற்குப் பதிலாக உண்மை, இரக்கம், பிறரன்பு என்ற விழுமியங்களில் இளையோரை வழிநடத்துவது, நலமிக்க சமுதாயத்தை உருவாக்கும் நிச்சயமான வழி என்று, திருத்தந்தை தன் உரையில் குறிப்பிட்டார்.

உலகமயமாக்கப்பட்ட இன்றையச் சூழலில், பல நாடுகளுக்குச் சென்று பயிலவேண்டிய கட்டாயம் இளையோருக்கு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, உலகமயமாக்கப்பட்டுள்ள அக்கறையின்மையைக் களைந்துவிட்டு, உடன்பிறந்த உணர்வோடு, இளைய சமுதாயம் வளர்வதற்கு அனைவரும் இணைந்து முயற்சிகள் எடுக்கவேண்டும் என்ற வேண்டுதலுடன் தன் உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.