2016-11-30 15:18:00

மறைக்கல்வியுரை : வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் ஆற்றும் பணி


நவ.,30,2016. உரோம் நகர் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருக்கிறது. திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை, கடந்த வாரத்தைப் போலவே, இப்புதனன்றும், அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் மண்டபத்திலேயே இடம்பெற்றது.  கத்தோலிக்கத் திருஅவையில், இறந்த ஆன்மாக்களுக்காக, சிறப்பான விதத்தில் அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த நவம்பர் மாதத்தின் கடைசி நாளான இப்புதனன்று, 'இறந்தோரை அடக்கம் செய்தல், மற்றும், வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் செபித்தல்' என்ற தலைப்பில் தன் போதனைகளை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்புச் சகோதர சகோதரிகளே! இன்று நாம், 'இரக்கத்தின், உடல் சார்ந்த மற்றும் ஆன்மீகம் சார்ந்த கடமைகள்’ பற்றிய மறைக்கல்வி போதனையை நிறைவு செய்கிறோம். உடல் சார்ந்த இரக்கப்பணிகளின் இறுதியானதாக நோக்கப்படும் 'இறந்தோரை அடக்கம் செய்தல்' என்பது, இன்றைய நம் காலத்தில் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. ஏனெனில், இன்றைய உலகின் பல பாகங்களில் இடம்பெறும் போர்களிலும், மோதல்களிலும் உயிரிழப்போருக்கு, நல்லதொரு அடக்கச்சடங்கை வழங்க எண்ணற்றோர் தங்கள் உயிரையும் பணயம் வைத்து பணியாற்ற வேண்டியிருக்கிறது. இயேசுவின் உடல் அடக்கம் செய்யப்பட, தன் கல்லறையை வழங்கிய அரிமத்தியா ஊர் யோசேப்பு போல, கிறிஸ்தவர்களாகிய நாமும், நம் சகோதரர்கள் ஒருநாள் உயிர்த்தெழுவார்கள் என்ற நம்பிக்கையுடன், அவர்களைப் பக்தியுணர்வுடன், கௌரவமாக அடக்கம் செய்கிறோம். இரக்கத்தின் ஆன்மீகப் பணிகளுள் இறுதியானதான, 'வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் செபித்தல்' என்பது, இறந்தோருக்காக, சிறப்பான விதத்தில் செபிக்கும் இந்த நவம்பர் மாதத்தில் சிறப்புப் பொருள் கொண்டதாக விளங்குகிறது. வாழ்வோர் மற்றும் இறந்தோருக்காகச் செபித்தல் என்பது, புனிதர்களின் ஒன்றிப்பின் மிக சக்தி வாய்ந்த வெளிப்பாடாகும். நம்முடைய மிக ஆழமான ஆவல்களையும் நம்பிக்கைகளையும் அறிந்துள்ள தூய ஆவியாரை நோக்கி நம் இதயங்களைத் திறப்பதோடு, தேவையிலிருக்கும் அனைவரையும் நம் செபங்களில் அணைத்துக் கொள்வோம்.

நாம் இந்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் தியானித்த ' உடல் மற்றும் ஆன்மீகம் சார்ந்த இரக்கப்பணிகள்', நமக்கு தொடர்ந்து தூண்டுதலாக இருந்து, இறை இரக்கத்தின் பாதையில் நம் கிறிஸ்தவ வாழ்வை வழி நடத்திச் செல்வதாக.

தன் மறைக்கல்வி உரையின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் மாதம் முதல் தேதி, இவ்வியாழனன்று இடம்பெற உள்ள உலக எயிட்ஸ் விழிப்புணர்வு தினம் குறித்தும் நினைவூட்டினார். அவர்களுக்காகச் செபிக்கவும், அவர்களுடன் ஒருமைப்பாடு கொள்ளவும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை. மேலும், டிசம்பர் மாதம் 2, 3 ஆகிய தேதிகளில், பிரான்ஸ் மற்றும் அரபு ஐக்கிய கூட்டமைப்பின் தூண்டுதலால், அபுதாபியில் இடம்பெறும் யுனெஸ்கோ கூட்டம் குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் உள்ள கலாச்சாரப் பாரம்பரியச் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் இடம்பெறும் இவ்வுலகக் கூட்டம், தன் நோக்கத்தில் வெற்றி காண வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இறுதியாக, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட புனித அந்திரேயா திருவிழாவையொட்டி கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ சபைக்கும், அதன் தலைவர், முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்களுக்கும் தன் வாழ்த்துக்களையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.