2016-11-30 15:59:00

கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தைக்கு திருத்தந்தையின் வாழ்த்து


நவ.30,2016. உடன்பிறந்தோரான திருத்தூதர்கள் பேதுரு, அந்திரேயா இருவரையும் முதன்மை அடையாளங்களாகக் கொண்டு இயங்கும் உரோம், மற்றும், கான்ஸ்டாண்டிநோபிள் தலைமைப் பீடங்கள், இப்புனிதர்களின் விழாக்களையொட்டி, வாழ்த்துக்களைப் பரிமாறி வரும் மரபு, நம்மிடையே நிலவும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்துகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தைக்கு அனுப்பியுள்ள ஒரு செய்தியில் கூறியுள்ளார்.

நவம்பர் 30, இப்புதனன்று கொண்டாடப்பட்ட திருத்தூதர் புனித அந்திரேயாவின் திருநாளையொட்டி, கான்ஸ்டாண்டிநோபிள் தலைமைப்பீடத்தின் தலைவரும், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தையுமான பர்த்தலோமேயு அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

உரோம் கத்தோலிக்க திருஅவையும், கான்ஸ்டாண்டிநோபிள் திரு அவையும் கடந்த ஆண்டுகளில் மேற்கொண்டுவரும் ஒன்றிப்பு முயற்சிகள் குறித்து தன் மகிழ்வை வெளியிட்டுள்ள திருத்தந்தை, இந்த ஒன்றிப்பு, ஒரே திருப்பலியில் பங்கேற்கும் அளவு வளரும் நாளை, தான் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.

இவ்வாண்டு ஜூன் மாதம் நடைபெற்ற கான்ஸ்டாண்டிநோபிள் உலக அவையில், கிறிஸ்தவ ஒன்றிப்பு குறித்து வெளிப்படுத்தப்பட்ட அர்ப்பணிப்பை பாராட்டுவதாக தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, வரலாற்றுக் காயங்களை மறந்து இணைவதற்கு, இறைவனின் அருளை இறைஞ்சுவதாகவும் எடுத்துரைத்துள்ளார்.

அண்மையில் அசிசி நகரில் அனைத்து மதங்களின் ஒன்றிணைந்த செப வழிபாட்டின்போது, கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தையை தான் சந்தித்த நிகழ்வை நினைவுக்கூர்ந்த திருத்தந்தை, ஒப்புரவு, ஒன்றிப்பு ஆகிய அம்சங்களே உலகில் அமைதியைக் கொணரும் என்பதில் இரு சபைகளும் கொண்டுள்ள நம்பிக்கை குறித்து மகிழ்வை வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.