2016-11-29 15:14:00

சிரியாவில் வன்முறைகளுக்கு மத்தியில் ஐந்து இலட்சம் சிறார்


நவ.29,2016. சிரியாவில் அதிகரித்துவரும் வன்முறைகளுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் சிறாரின் எண்ணிக்கை, ஓராண்டுக்குள்ளாக இருமடங்காக அதிகரித்து, அவ்வெண்ணிக்கை ஏறக்குறைய ஐந்து இலட்சமாக உயர்ந்துள்ளது என்று, ஐ.நா.வின் குழந்தை நல நிறுவனமான யூனிசெப் கூறியது.

சிரியாவில், இலட்சக்கணக்கான மக்களுக்கு, குறிப்பாக, போர்கள் இடம்பெறும் பகுதிகளில் வாழும் பல்லாயிரக்கணக்கான சிறாருக்கு, வாழ்வு, முடிவற்ற பெருங்கவலையாக மாறியுள்ளது என, யூனிசெப் நிறுவனத்தின் செயல்திட்ட இயக்குனர் அந்தோனி லேக் அவர்கள் தெரிவித்தார்.

ஏறக்குறைய அடிப்படை வசதிகளும், நீடித்த மனிதாபிமான உதவிகளும் முழுவதும், பெற முடியாத 16 இடங்களில், ஐந்து இலட்சம் சிறார் வாழ்கின்றனர் எனவும், இச்சிறார் கொலை செய்யப்படுகின்றனர், காயமடைகின்றனர் மற்றும், பள்ளிக்குச் செல்லப் பயப்படுகின்றனர் எனவும், லேக் அவர்கள் கூறினார் 

சிரியாவில், ஏறக்குறைய ஆறு ஆண்டுகளாக போர் இடம்பெற்றுவரும்வேளை, மனிதாபிமான உதவிகள் சென்றடைய உதவுமாறு, போரிடும் தரப்புக்களை, யூனிசெப் நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்று, செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.