2016-11-29 15:08:00

சிரியா கிறிஸ்தவர்களுக்காகச் செபிப்போம், கர்தினால் கிரேசியஸ்


நவ.29,2016. சிரியாவிலுள்ள அனைத்துக் குடும்பங்கள் மற்றும், கிறிஸ்தவர்களுக்காகச் செபிப்போம் என்று, ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரான, மும்பை பேராயர், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இலங்கையின் நெகோம்போவில், இத்திங்களன்று தொடங்கிய, FABC என்ற ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின், 11வது நிறையமர்வு கூட்டத்தின் ஆரம்பத் திருப்பலியில் இவ்வாறு கேட்டுக்கொண்டார் கர்தினால் கிரேசியஸ்.

ஆசியாவிலிருந்து, ஏறக்குறைய 140 பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இக்கூட்டம், நவம்பர் 28, இத்திங்கள் முதல், டிசம்பர் 04, வருகிற ஞாயிறு வரை நடைபெறுகின்றது.

“ஆசியக் கத்தோலிக்க குடும்பம் : இரக்கத்தின் மறைப்பணியில் ஏழைகளின் இல்லத் திருஅவை” என்ற தலைப்பில் நடைபெறும் இக்கூட்டத்தில், குடும்ப உறவுகள் முன்வைக்கும் பெரும் சவால்கள் பற்றி விவாதிக்கப்படுகின்றன.

1972ம் ஆண்டு முதல், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் நிறையமர்வு கூட்டம், இலங்கையில், தற்போது முதன்முறையாக நடைபெறுகிறது.

உலக ஆயர்கள் மாமன்றத்தின் ஒளியில், ஆசியாவில், நற்செய்தியின் மகிழ்வும், குடும்பமும் என்பது குறித்து, இதில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் கலந்துரையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்திற்கென, இலங்கை அரசு, ஒரு கோடி ரூபாயை வழங்கியுள்ளது என, UCA செய்தி நிறுவனம் கூறியது.

மேலும், இக்கூட்டத்தில் கலந்துகொள்ள, இந்தியாவின் இராஞ்சி பேராயர், கர்தினால் டெலெஸ்போர் டோப்போ அவர்களை, தன் பிரதிநிதியாக நியமித்துள்ள திருத்தந்தை, கர்தினால் வழியாக, இக்கூட்டத்திற்கு அனுப்பியுள்ள செய்தியில், தற்போது இலங்கையில் இடம்பெறும் இந்த 11வது நிறையமர்வுக் கூட்டம், பண்டைய காலத்தில் துடிப்புள்ள மறைபோதகர்கள் ஆசிய கடற்கரைகளில் வந்திறங்கியதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துவதாக உள்ளது என்று கூறியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி  








All the contents on this site are copyrighted ©.