2016-11-28 17:00:00

யூபிலி நிகழ்வுகளை ஒருங்கிணைத்த குழுவுக்கு திருத்தந்தை நன்றி


நவ.28,2016. நிறைவு பெற்ற சிறப்பு யூபிலி ஆண்டின் நிகழ்வுகள், நம் தினசரி வாழ்வின் பகுதியாகி, இரக்கத்திற்கு நம் வாழ்வை அர்ப்பணிப்பதாக்கி, விசுவாசிகளின் நிரந்தர வாழ்வுப் பாதையாக மாறவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

சிறப்பு யூபிலி ஆண்டின் வெற்றிக்காக உழைத்த தன்னார்வப் பணியாளர்களின் பிரதிநிதிகள், தலைவர்கள், மற்றும், அமைப்பாளர்களை, இத்திங்கள் காலை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.

யூபிலி ஆண்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்த குழுவின் தலைவர், பேராயர் ரீனோ பிசிக்கெல்லா, பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறந்த முறையில் வழங்கிய இத்தாலிய உள்துறை அமைச்சர், ஆஞ்செலீனா அல்ஃபானோ, இத்தாலிய, உரோம் நகர், மற்றும் வத்திக்கான் காவல்துறையினர் ஆகியோருக்கு தன் ஆழ்ந்த நன்றியை வெளியிட்டார், திருத்தந்தை.

இத்தாலியின் பல்வேறு மாவட்டங்களின் தலைவர்களுக்கும், தன் நன்றியை வெளியிட்ட திருத்தந்தை, புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவையினரை சிறப்பாக நினைவு கூர்ந்தார்.

"நீங்கள் இரக்கத்தைப் பெற விழைந்தால், இரக்கமுள்ளவராக இருக்கவேண்டும்" என்று புனித அகஸ்தீன் கூறிய வார்த்தைகளையும் எடுத்துரைத்து, சிறப்பு யூபிலி ஆண்டுப் பணிகளில் ஈடுபட்ட குழுவினருக்கு, தன் உரையை நிறைவு செய்தார், திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.