2016-11-28 16:54:00

திருத்தந்தையுடன் அயர்லாந்து பிரதமர் சந்திப்பு


நவ.,28,2016. அயர்லாந்து நாட்டின் பிரதமர் Enda Kenny அவர்கள், இத்திங்கள் காலை திருப்பீடத்தில் திருத்தந்தையை சந்தித்து உரையாடினார்.

திருத்தந்தையுடனான சந்திப்பிற்குப்பின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியேத்ரோ பரோலின், பன்னாட்டு உறவுகள் திருப்பீடச் செயலகத்தின் செயலர், பேராயர், பால் ரிச்சர்டு காலகர் ஆகியோரையும் சந்தித்து உரையாடினார், அயர்லாந்து பிரதமர்.

திருப்பீடத்திற்கும் அயர்லாந்திற்கும் இடையே நிலவிவரும் வரலாற்று சிறப்புமிக்க உறவு, சமூக மற்றும் கல்வித் துறைகளில் திருவையின் பங்களிப்பு, சமூகத்தில் மனித மாண்பை, குறிப்பாக வலிமையற்றோர் மற்றும் பாதுகாப்பற்றோரின் மாண்பை மதித்து ஊக்குவிப்பதில் கிறிஸ்தவரின் பங்கு போன்றவை இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டன.

இன்றைய ஐரோப்பா குறித்த கருத்துக்கள், குறிப்பாக, குடிபெயர்தல், இளையோர் வேலைவாய்ப்பின்மை போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திங்களன்று காலை, திருப்பீடத்திற்கான கொரிய தூதுவராக பணியாற்றி தற்போது நாடு திரும்பும்  தூதுவர் Francesco Kyung-Surk Kim அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து, பிரியாவிடை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இதற்கிடையே, 'இரக்கம் என்பது திரு அவையின் வாழ்வில் ஓர் இடைச்செருகல் அல்ல, அது, திருஅவையின் வாழ்வாக மாறி, நற்செய்தியின் ஆழமான உண்மைகளை தொட்டு உணரக்கூடியதாக மாற்றுகிறது' என இத்திங்கள் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.