2016-11-28 17:15:00

கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்வில் ஒவ்வொரு நாளும் இடம்பெறுகிறது


நவ.,28,2016. கிறிஸ்து பிறப்பு விழாவின்போது நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்து நம்மை சந்திக்க வருவது, அந்த நாளில் மட்டுமல்ல, நம் வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் இடம்பெற்று வருகிறது என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறான இஞ்ஞாயிறன்று, உரோம் நகரின் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் தினசரி வாழ்வின் நடவடிக்கைகளுக்கும், திடீரென இடம்பெறும் இறைவனின் வருகைக்கும் இடையேயான முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டினார்.

'மனித குலத்தோடு இறைவனின் சந்திப்பு' என்ற தலைப்பில் தன் கருத்துக்களை வழங்கிய திருத்தந்தை, கடந்த காலத்தில் வார்த்தை மனுவுருவானது, நிகழ்காலத்தில் நம் வாழ்வில் இறைவன் நுழைவது, வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பளிக்க இறைவன் மகிமையில் மீண்டும் வருவது போன்றவற்றைக் குறித்து எடுத்தியம்பினார்.

இயேசுவின் வருகை குறித்து, நற்செய்தி நம்மை அச்சுறுத்த வருவதில்லை, மாறாக, அவரின் வருகையால் நம் வாழ்வில் அனைத்தும் புது அர்த்தத்தைப் பெறுகின்றன என்பதையே கூற விரும்புகிறது எனவும் கூறினார் திருத்தந்தை.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.