2016-11-28 17:10:00

அறிவியலுக்கும் கிறிஸ்தவ சமூகங்களுக்குமிடையே ஒத்துழைப்பு


நவ.,28,2016. அறிவியல் முன்னேற்றங்களின் பலனாக மனிதர்களிடையேயான ஒத்துழைப்பிற்கும், குறிப்பாக இப்பூமி கோளத்தின் பாதுகாப்பிற்கும் அறிவியலாளர்கள் ஆற்றிவரும் பணிக்காக தன் நன்றியை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தங்கள் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் திருப்பீட அறிவியல் கழகத்தின் அங்கத்தினர்களை இத்திங்களன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமூகச் சுற்றுச்சூழல் சம நிலைக்கு, முன் எப்போதையும்விட தற்போது அறிவியலின் தேவை அதிகம் உள்ளதையும், அறிவியலுக்கும் கிறிஸ்தவ சமூகங்களுக்குமிடையே புதுப்பிக்கப்பட்ட ஒத்துழைப்பு ஏற்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

மனித குல ஒன்றிணைந்த வளர்ச்சி, அமைதி, நீதி, மனித விடுதலை போன்றவைகளுக்காக உழைப்பதில் திருப்பீட அறிவியல் கழகத்தின் அர்ப்பணத்தையும் பாராட்டினார் திருத்தந்தை.

நாமே இவ்வுலகின் உடமையாளர்கள்போல், வளர்ச்சியின் விதிகளை மதிக்காமல், இயற்கை வளங்களை சுரண்டுவதற்கு தன் கண்டனத்தையும் வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வை பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் ஒத்துழைப்பவர்களாக செயல்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.