2016-11-26 15:15:00

திருவருகைக்காலச் சிந்தனை - மரணத்தைச் சந்திக்கும் பக்குவம்


ஜான் வெஸ்லி என்பவர், 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மேதை. கிறிஸ்தவ வாழ்வு என்பது, பொறுப்புடன் சரியானக் கணக்கை இறைவனிடம் ஒப்படைக்கும் ஒரு பணி என்ற எண்ணத்தை, இங்கிலாந்து மக்கள் மத்தியில் விதைத்தவர் இவர். “இன்று உங்கள் வாழ்வின் கடைசி நாள் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று இவரிடம் ஒருவர் கேட்டபோது, இவர் சொன்ன பதில் இதுதான்: "மாலை நான்கு மணிக்கு, நான் வழக்கம்போல் தேநீர் அருந்துவேன், 6 மணிக்கு, நோயுற்றிருக்கும் திருமதி பிரவுன் அவர்களை மருத்துவமனையில் பார்க்கச் செல்வேன், 8 மணிக்கு, என் மாலை செபங்களைச் சொல்வேன், இரவு உணவுக்குப் பின், வழக்கம்போல் படுக்கச் செல்வேன்... விழித்தெழும்போது, என் இறைவன் முகத்தில் விழிப்பேன்" என்று சொன்னாராம்.

ஜான் வெஸ்லியைப் போல், மனதில் எவ்வித அச்சமுமின்றி, அமைதியாக மரணத்தைச் சந்திக்கும் பக்குவம், ஒரு நாளில் உருவாகும் மனநிலை அல்ல. வாழ்நாளெல்லாம் ஒருவர் பழக்கப்படுத்தும் மனநிலை அது. இத்தகைய நிலையை அடைந்தவர்கள், தங்கள் தனிப்பட்ட வாழ்வில் ஆழ்ந்த அமைதியை உணர்ந்தவர்கள். அமைதியை, தங்கள் உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்பவர்கள் இவ்வுலகில் பெருகினால், நாம் இன்று ஏங்கித் தவிக்கும் அமைதி, உலகெங்கும் நிறையும். திருவருகைக் காலத்தில், இந்த அமைதி, உலகெங்கும் நிறைய வேண்டுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.