2016-11-25 15:21:00

பெண் தியாக்கோன்கள் பற்றிய ஆய்வுக் குழு கூட்டம்


நவ.25,2016. உலக ஆண்கள் துறவு சபைகளின் தலைவர்களை, இவ்வெள்ளியன்று, உலக ஆயர்கள் மாமன்ற அறையில் சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், திருஅவையில், பெண் தியாக்கோன்கள் பற்றி ஆய்வு செய்யும் குழு, தனது முதல் கூட்டத்தை, இவ்வெள்ளியன்று, உரோம் நகரில் தொடங்கியுள்ளது.

திருஅவையின் தொடக்க காலங்களில், பெண் தியாக்கோன்கள் பணியாற்றிய விவகாரம் குறித்து, ஆய்வு செய்வதற்கென, கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி, 12 பேர் கொண்ட இக்குழுவை உருவாக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்தின் செயலரும், உலக இறையியல் கழகத்தின் பொதுச் செயலருமாகிய, பேராயர் Luis Francisco Ladaria Ferrer அவர்கள் தலைமையில், இப்பேராயத்தில், பெண் தியாக்கோன்கள் பற்றி ஆய்வு செய்யும் குழு, தனது இரண்டு நாள் கூட்டத்தை நடத்தி வருகிறது. உலக இறையியல் கழகம், 2002ம் ஆண்டில், இவ்விவகாரம் குறித்து ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், கிறிஸ்மஸ் குடிலும், கிறிஸ்மஸ் மரமும் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வட இத்தாலியின் Trentoவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள 25 மீட்டர் உயரமுள்ள கிறிஸ்மஸ் மரம் இருந்த இடத்தில், பள்ளிச் சிறார், ஏறத்தாழ நாற்பது புதிய கன்றுகளை நட்டு வைத்துள்ளனர். சுற்றுச்சூழலை மதிக்கும் விதத்தில், இக்கிறிஸ்மஸ் மரத்தில், ஏறத்தாழ 18 ஆயிரம் கிறிஸ்மஸ் விளக்குகள் அமைக்கப்படுகின்றன.

கிறிஸ்மஸ் குடில், மால்ட்டா நாட்டைச் சேர்ந்தவர்களால் அமைக்கப்படுகிறது. 19 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படும் இக்குடிலில், 17 கிறிஸ்மஸ் உருவங்கள் வைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.