2016-11-25 15:29:00

ஆஸ்திரேலிய பூர்வீக இன மக்களுக்கு திருத்தந்தை கடிதம்


நவ.25,2016. ஆஸ்திரேலியாவின் Alice Springs பகுதியில் வாழும், பூர்வீக இன மக்களுக்கு, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் உரையாற்றியதன் முப்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்மக்களுக்கு, ஊக்கமூட்டும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

1986ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், ஆஸ்திரேலிய மற்றும் Torres Strait தீவுகளின் பூர்வீக இன மக்களுக்கு ஆற்றிய உரையின் நினைவாக, அந்நாட்டு, பூர்வீக இன மற்றும் Torres Strait தீவுகளின் பூர்வீக இன மக்களின் தேசிய கத்தோலிக்க அவைத்(NATSICC) தலைவர் John Lochowiak அவர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இம்மக்களின் நீண்ட கால உன்னதக் கலாச்சாரம் மறைந்து போவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது என்றும், இம்மக்களின் கொடைகள், மதிப்புக் குறைந்தவை, என்ற எண்ணத்தில், அவைகளைக் காப்பதில், இவர்கள் அக்கறையின்றி இருக்கக் கூடாது என்றும் கூறியுள்ள திருத்தந்தை, இக்கொடைகளை ஒருவர் ஒருவரோடு பகிரவும், அவர்களின் பிள்ளைகளுக்கு அவை பற்றிக் கற்றுக்கொடுக்கவும் வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.

பூர்வீக இன மக்களின் பாடல்கள், கதைகள், ஓவியங்கள், நடனங்கள், மொழிகள் ஆகியவை அழிவதற்கு, ஒருபோதும் அனுமதிக்கப்படக் கூடாது என்றும் திருத்தந்தை மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.