2016-11-24 16:34:00

திருத்தந்தையின் திருவழிபாட்டு நிகழ்வுகள்


நவ.24,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2016ம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2017ம் ஆண்டு சனவரி மாதங்களில் தலைமையேற்று நடத்தும் திருவழிபாட்டு நிகழ்வுகளின் அட்டவணையை, திருப்பீடத் திருவழிபாட்டுத் துறை இவ்வியாழன் காலை வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 12ம் தேதி கொண்டாடப்படும் குவாதலூப்பே அன்னை மரியாவின் திருநாள் திருப்பலியை, மாலை 6 மணிக்கும், டிசம்பர் 24ம் தேதி இரவு, 9.30 மணிக்கு, கிறிஸ்து பிறப்பு திருவிழிப்புத் திருப்பலியையும், புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், திருத்தந்தை நிறைவேற்றுகிறார்.

டிசம்பர் 25, ஞாயிறன்று கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவன்று, நண்பகல் 12 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காவின் மேல்மாடத்திலிருந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "ஊருக்கும் உலகுக்கும்" என்ற பொருள்படும் “Urbi et Orbi” சிறப்புச் செய்தியையும், அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்குகிறார்.

டிசம்பர் 31ம் தேதி சனிக்கிழமை மாலை, Te Deum எனப்படும் நன்றி வழிபாட்டினை, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் மாலை 5 மணிக்கு தலைமையேற்று நடத்தும் திருத்தந்தை, 2017ம் ஆண்டு சனவரி முதல் நாளன்று காலை 10 மணிக்கு, "மரியா, இறைவனின் தாய்" பெருவிழா திருப்பலியை நிறைவேற்றுகிறார்.

சனவரி 6ம் தேதி சிறப்பிக்கப்படும் மூன்று ஞானிகள் திருநாள் திருப்பலியை, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் காலை 10 மணிக்கு நிறைவேற்றும் திருத்தந்தை, சனவரி 8, கிறிஸ்துவின் திருமுழுக்கு ஞாயிறன்று, சிஸ்தீன் சிற்றாலயத்தில், குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்கும் அருளடையாளத்தையும், திருப்பலியையும் நிறைவேற்றுவார்.

சனவரி 25ம் தேதி, புனித பவுல் அடிகளாரின் மனமாற்றத் திருநாளன்று, மாலை 5.30 மணிக்கு புனித பவுல் பசிலிக்காப் பேராலயத்தில் நடைபெறும் மாலை இறைப்புகழ் வழிபாட்டை தலைமையேற்று நடத்தும் திருத்தந்தை, கிறிஸ்தவ ஒன்றிப்புக்கென செபிக்கும் வாரத்தை துவக்கி வைக்கிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.