2016-11-24 14:14:00

இது இரக்கத்தின் காலம்:மாற்றவேண்டியது இடத்தை அல்ல, இதயத்தை!


ஓர் இளைஞனுக்கு, இந்த உலகமே துன்பமயமாகத் தோன்றியது. அதை இன்பமயமாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்த அந்த இளைஞன், ஒரு பெரியவரை நாடி ஆலோசனை கேட்டான். சரி, இங்கே உட்கார், உனக்கு ஒரு கதை சொல்கிறேன் என்றார் பெரியவர். இளைஞனும் கதை கேட்க அமர்ந்தான். அது, காலணிகள் கண்டுபிடிக்கப்படாத காலம். அக்காலத்தில், ஒருநாள், அரசர் ஒருவர் காட்டுக்கு வேட்டையாடப் போனார். பாதை, கல்லும் முள்ளும் நிறைந்து கரடுமுரடாக இருந்தது. அரசரின் காலில் முள் குத்தி, வலித்தது. அதனால், தனது அமைச்சரை அழைத்து, “பாதையெல்லாம் மோசமாக இருக்கின்றது, ஆதலால், நம் படைவீரர்களிடம், இந்தக் காட்டிலுள்ள மாடுகளையெல்லாம் வேட்டையாடச் சொல்லுங்கள். அந்த மாடுகளின் தோல்களைக் கம்பளங்களாக, இந்த நாடெங்கும் விரிக்கச் சொல்லுங்கள்” என்றார். அரச ஆணையை மீற இயலாமல், அமைச்சரும் அதை நிறைவேற்றத் தயாரானார். இதைக் கவனித்துக்கொண்டிருந்த துறவி ஒருவர், அரசரை அணுகி, “மன்னா, எதற்கு இந்த வீண் செலவு, உணது பாதங்களைக் காக்க இரண்டு துண்டு மாட்டுத்தோல் போதுமே” என்று சொன்னார். துறவியாரின் ஆலோசனையைக் கேட்டு அரசர் தனது ஆணையை மாற்றினார். இவ்வாறு உலகத்தில் முதல் காலணி உருவாகியது. என்று கதை சொல்லி முடித்தார் பெரியவர். கதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த இளைஞன், பெரியவரே, எனது நோக்கத்திற்கும், இந்தக் கதைக்கும் என்ன தொடர்பு? என்று கேட்டான். அதற்குப் பெரியவர், “தம்பி! உலகத்தை, துன்பமற்ற இடமாக அமைக்க, உன் உள்ளத்தை மாற்ற வேண்டுமே தவிர, உலகத்தை அல்ல” என்று சொன்னார்.

ஆம். மாற்றம், முதலில் தன்னிலிருந்து தொடங்க வேண்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.