2016-11-23 14:09:00

மறைக்கல்வி : சந்தேகத்திலும் அறியாமையிலும் வாழ்வோருக்கு.....


நவ.23,2016. செப்டம்பர் மாத இறுதியிலேயே உரோம் நகரில் குளிர் காற்று வீசத் துவங்கியபோதிலும், அவ்வப்போது வெப்பமும் தலை நீட்டிக்கொண்டிருந்த நிலையில், இவ்வாரத் துவக்கத்தில் இந்நகரின் தட்ப வெப்பம் திடீரென மாறியது, அதாவது எதிர்பாராத விதமாக நான்கு நாட்களாக குளிர் பெரிய அளவில் குறையத் துவங்கியது. இந்நிலையில், இவ்வாரத்தில் மழை இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்ததால், திருத்தந்தையின் இவ்வார புதன் மறைக்கல்வி உரை, அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் ஏறபாடுச் செய்யப்பட்டிருந்தது. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு நிறைவுக்கு வந்தாலும், இரக்கச் செயல்களுக்கு முடிவேயில்லை என்பதை தன் உரைகளில் பலமுறை வலியுறுத்தி வந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஞாயிறோடு இரக்கத்தின் யூபிலி ஆண்டு நிறைவுற்றுள்ளபோதிலும், இவ்வாரமும் இரக்கம் தொடர்புடைய ஆன்மீகச் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். இரக்கத்தின் ஆன்மீகப் பணிகளுள் ஒன்றான, 'சந்தேகத்தில் வாழ்வோருக்கு ஆலோசனை வழங்குதல், மற்றும், அறியாமையில் வாழ்வோருக்கு கல்வியறிவூட்டுதல்' என்பது குறித்து இன்றைய மறைக்கல்வி போதனையில் நோக்குவோம் என தன் உரையைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சந்தேகத்தில் இருப்போருக்கு ஆலோசனை வழங்குவதும், அறியாமையில் வாழ்வோருக்கு கல்வியறிவூட்டுவதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பது மட்டுமல்ல, இவை ஒவ்வொரு நாளும், நம் குடும்பங்களிலும் சமூகங்களிலும் நடைமுறைப்படுத்தவல்லவை.

திருஅவையின் நற்செய்தி அறிவிப்புப்பணி என்பது, எப்போதுமே, கல்வி கற்பிப்பதோடும், கல்விக்கூடங்களுக்கு நிதி உதவி வழங்குவதோடும் இணைந்து செல்வது. ஏனெனில் கல்வி கற்பிப்பது என்பது, மனித மாண்பை ஊக்குவிப்பதுடன், இறைவன் மனிதருக்கு வழங்கியுள்ள கொடைகளின் முழு வளர்ச்சிக்கு உதவுவதாகவும் உள்ளது. எழுத்தறிவின்மையும், கல்வியைப் பெற வசதியின்றி இருத்தலும், ஏழ்மை மற்றும் அநீதியின் ஒரு வடிவமேயாகும். நம்மைக் குறித்தும் நம்மைச் சுற்றியுள்ள உலகு குறித்தும் நடுநிலை மதிப்பீட்டாற்றலுடன் திறனாய்வு செய்யும் தகுதியை நம்மில் வளர்க்க உதவுகின்றது கல்வி. கேள்விகளை எழுப்புவதன் வழியாக, நமக்கு திருப்தியளிக்கும் பதில்களைக் கண்டுகொள்ளவும் உதவுகிறது கல்வி. வாழ்வின் அர்த்தம் குறித்த சந்தேகங்களால் துன்புறுவோர் மற்றும் தங்கள் விசுவாசத்தில் உறுதி குலையும் நிலையிலிருப்போர் ஆகியோருக்கு ஆலோசனை வழங்குவது, இரக்கத்தின் உண்மைச் செயல்பாடாகும். இத்தகைய பணிகளுக்கு, தங்களை, வேதியர்களாகவும், மறைக்கல்வி ஆசிரியர்களாகவும் அர்ப்பணித்துள்ள அனைவருக்கும், நாம் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். நம் விசுவாச வாழ்வு மற்றும் தாராள மனப்பான்மையுடன்கூடிய அக்கறையின் சாட்சியம் வழியாக, நாம் ஒருவருக்கொருவர் ஆதரவு வழங்க அழைப்புப் பெற்றுள்ளோம். ஏனெனில், இறையன்பின் மிக உறுதியான அடையாளங்களான இவைகள், நம் வாழ்வுக்கு அர்த்தத்தையும் நோக்கத்தையும் வழங்குகின்றன.

இவ்வாறு தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.