2016-11-23 15:58:00

நற்செய்தியின் இதயத்துடிப்பான இரக்கம், வாழ்வெல்லாம் தொடர


நவ.23,2016. இரக்கத்தின் யூபிலி நிறைவுற்றுள்ள இவ்வேளையில், இனி, நமது முழுக்கை சட்டைகளை மடித்துவிட்டுக்கொண்டு செயல்களில் இறங்கவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் அனைத்து நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்த, புதியவழி நற்செய்தி பரப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர், பேராயர் ரீனோ பிசிக்கெல்லா அவர்கள், L’Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டி, "முழுக்கை சட்டைகளை மடித்துவிட்டுக்கொண்டு" என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

இரக்கத்தின் யூபிலி, கால அளவில் ஓராண்டு நீடித்தாலும், நற்செய்தியின் இதயத்துடிப்பான இரக்கம், வாழ்நாளெல்லாம் தொடரவேண்டும் என்ற பாடத்தை, நாம் அனைவரும் பல வழிகளில் உணர்ந்துள்ளோம் என்று பேராயர் பிசிக்கெல்லா அவர்கள் குறிப்பிட்டார்.

"இறைவனுக்காக 24 மணிநேரங்கள்" என்ற முயற்சியின் வழியாக, ஒப்புரவு அருளடையாளத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின் யூபிலி ஆண்டில், "இரக்கத்தின் மறைப்பணியாளர்களை" உலகெங்கும் அனுப்பியது, இறைவனால் மன்னிக்க இயலாத குற்றம் எதுவும் இல்லை என்பதை, இவ்வுலகிற்கு மிகத் தெளிவாக உணர்த்தியது என்று, பேராயர் பிசிக்கெல்லா அவர்கள் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் இறுதியில் திருத்தந்தை வெளியிட்ட "இரக்கமும் அவலநிலையும்" என்ற திருத்தூது மடலின் சிறப்பு குறித்து எழுந்த கேள்விக்கு பதில் அளித்த பேராயர் பிசிக்கெல்லா அவர்கள், "வறியோரின் உலக நாளை" திருத்தந்தை உருவாகியுள்ளது, இத்திருமடலின் மிகச் சிறந்த தனித்துவம் என்று குறிப்பிட்டார்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டு முழுவதும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட "இரக்கத்தின் வெள்ளிக்கிழமை" என்ற முயற்சி, மனித சமுதாயத்தில் துன்புறும் பல்வேறு குழுக்களுடன் திருத்தந்தையை இணைத்தது என்பதை, பேராயர் தன் பேட்டியில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.