2016-11-23 16:09:00

துறவு சபை நிதி மேலாண்மை குறித்து வத்திக்கானில் கருத்தரங்கு


நவ.23,2016. திருஅவையின் இருபால் துறவியர் சபைகள், தங்கள் வரவு செலவு குறித்த தீர்மானங்களை தகுந்த முறையில் எடுக்க உதவியாக, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு மற்றும் திருத்தூதுப் பணி அமைப்புக்களின் பேராயம், வத்திக்கானில் மூன்று நாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.

நவம்பர் 25, வருகிற வெள்ளி முதல், 27, ஞாயிறு முடிய Antonianum பாப்பிறை பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கருத்தரங்கில், உலகின் பல நாடுகளில், வரவு செலவு துறையில் ஈடுபட்டுள்ள 1000த்திற்கும் அதிகமான துறவியர் கலந்துகொள்கின்றனர்.

நிதி குறித்து, திருஅவை மேற்கொள்ளும் அனைத்து செயல்பாடுகளிலும், இன்னும் அதிகமான வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும் என்று, 2014ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு தீர்மானத்தின் தொடர் முயற்சியாக, இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கு, இரண்டாவது முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று, பேராயத்தின் செய்தி குறிப்பு கூறுகிறது.

துறவிகளின் எண்ணிக்கை குறைவால், பல துறவு சபைகளின் பெரும் இல்லங்கள் பயனின்றி மூடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, அவ்வில்லங்களின் வசதிகள், வறியோருக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துறவியருக்கு எழுதிய ஒரு மடலில் கூறியுள்ளது, இந்தக் கருத்தரங்கின் ஒரு முக்கிய விவாதமாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.