2016-11-23 14:22:00

இரக்கத்தின் தூதர்கள் : அநீத இறப்பையும் புன்முறுவலோடு எதிர்கொண்டவர்


நவ.23,2016. “நாங்கள் அடிமைகள் போன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இயேசுவே எனக்கு உதவி செய்கிறார். மூச்சுவிடக்கூட நேரம் இல்லை. அவ்வளவு வேலை இருக்கின்றது. எதுவுமே இல்லாதவர்களுக்கு உணவளிக்கும் பணியை, எனது கண்இமைபோல் காத்துச் செய்கிறேன். எதுவுமே இல்லாத மக்கள், ஏராளமாக உள்ளனர். சிறிய பொருள்களுக்காகத் திருடுபவர்களும் உள்ளனர். அந்தக் குடும்பத்தில் 12 பேர். அவர்களின் உணவு அறை காலியாக உள்ளது. அவர்களின் ஆடைகள் துண்டு துண்டாக, விழுந்துகொண்டிருக்கின்றன. படுக்கையில் உள்ள நோயாளர்களும் இருக்கின்றனர். அக்குடும்பத்தில் தண்ணீர்க்கூட கிடையாது. இத்தகைய, ஏமாற்றுச் செய்திகளையும்கூட, நான் பெற்று வருகிறேன். ஆனால், எனது பணப்பை காலியாக உள்ளது. ஆனால் இதில் கவலைப்படுவதற்கு எதுவுமில்லை. ஏனென்றால், நம் வானகப் பொருளாளர் தாராளமாகவே இருக்கிறார்”. இவ்வாறு சொன்னவர்,மெக்சிகோவில் கத்தோலிக்கத்திற்கு எதிரான கலகத்தின்போது, மறைந்து வாழ்ந்த கத்தோலிக்கருக்கு உதவிய, அந்நாட்டு மறைசாட்சி, இயேசு சபை அருள்பணியாளர், அருளாளர் மிகுவேல் அகுஸ்தீன் புரோ ஹூவாரெஸ். இவர், 1891ம் ஆண்டு, சனவரி 13ம் தேதி, மெக்சிகோ நாட்டு, குவாதாலூப்பே நகரில், ஒரு சுரங்கப் பொறியியல் வல்லுநரின் மகனாகப் பிறந்தார். இளவயதிலிருந்தே, குறும்புத்தனம் மிக்கவராக, தனது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்த இவர், ஆன்மீகத்திலும் ஆழமாக வேரூன்றியிருந்தார். சிறுவனாக இருந்தபோது, சிலநேரங்களில், சுயநினைவை இழக்கும் நோயினால் தாக்கப்பட்டிருந்தார். ஒருமுறை, மரணத்தின் வாசலைத்தொட்டுவிட்ட நிலையில், கண்களைத் திறந்த இவர், தனது பெற்றோரிடம், அவருக்குப் பிடித்த, இனிப்பு ரொட்டியைக் கேட்டார். அவர்கள் மொழியில் இந்த ரொட்டிக்கு cocol என்று பெயர். இந்நிகழ்வுக்குப் பின்னர், இவர் cocol என்ற, புனைப்பெயருடனே அழைக்கப்பட்டார்.

மிகுவேல் புரோ, அதாவது மிக்கேல் புரோ அவர்கள், தனது 20வது வயதுவரை, தனது தந்தையின் அலுவலகத்தில் பணிபுரிந்தார். இவரின் அக்கா ஒருவர், ஆழ்தியான சபையில் சேர்ந்திருந்தார். அந்த அக்கா மீது மிகவும் பாசம் வைத்திருந்த இவர், நானும் ஏன் அக்காவைப் பின்பற்றக் கூடாது என்று எண்ணி, குருவாக ஆசைப்பட்டார். கிறிஸ்து அரசரே தனக்கு எல்லாம் என்று உறுதிபூண்டு, 1911ம் ஆண்டில், Michoacanலுள்ள, El Llano இயேசு சபை நவதுறவியர் இல்லத்தில் சேர்ந்தார். 1914ம் ஆண்டுவரை மெக்சிகோவில் படித்துக் கொண்டிருந்தார். அச்சமயத்தில், மெக்சிகோவிலும், அதன் சுற்றுப்புறங்களிலும், கத்தோலிக்கத்திற்கு எதிராகக் கலகம் மூண்டது. ஆலயங்கள் சூறையாடப்பட்டன. அருள்பணியாளர்களும், அருள்சகோதரிகளும், பலவிதமான சித்ரவதைகளுக்கு உள்ளாகினர். ஒருநாள், மிக்கேல் புரோ அவர்கள், தங்கியிருந்த துறவு இல்லத்தை, பகைவர்கள் நெருங்கி, நூலகத்திற்குத் தீ வைத்தனர். அதனால், நவதுறவியர் பயிற்சியாளர், அவ்வில்லத்தை கலைத்து, நவதுறவியரை, அமெரிக்காவுக்குத் தப்பி ஓடுங்கள் என்று சொல்லி விட்டார். இவர்கள், பல இன்னல்கள், வேதனை நிறைந்த பயணங்களுக்குப் பின்னர், டெக்சஸ், நியுமெக்சிகோ வழியாக, கலிஃபோர்னியாவிலுள்ள இயேசு சபை இல்லத்தை அடைந்தனர். 1915ம் ஆண்டில் இஸ்பெயின் குருத்துவ கல்லூரிக்கு இவர் அனுப்பப்பட்டார். பின்னர், 1925ம் ஆண்டில் பெல்ஜியம் சென்று குருவானார். இவர் கடும் வயிற்றுவலியால் துன்புற்றார். மூன்று அறுவை சிகிச்சைகள் பலனளிக்கவில்லை. தாயகம் திரும்பினால் உடல்நிலை சரியாகிவிடும் என்று எண்ணிய இயேசு சபைத் தலைவர்கள், அருள்பணி மிக்கேல் புரோ அவர்களை, மெக்சிகோவுக்கு அனுப்பினர்.

அச்சமயம், மெக்சிகோவில், கால்லஸ் என்பவனின் தலைமையில், திருஅவைக்கு எதிரான கலகம் மோசமடைந்திருந்தது. ஆலயங்கள் மூடப்பட்டிருந்தன. அருள்பணியாளர்கள், மறைந்து வாழ்ந்தனர். அருள்பணி புரோ அவர்களும், cocol என்ற பெயரில், கத்தோலிக்கர், மறைந்து வாழ்ந்த இடங்களுக்குச் சென்று, அருளடையாளங்களை வழங்கி, அவர்களின் ஆன்மீக வாழ்வை ஊக்குவித்து வந்தார். பிச்சையெடுப்பவர் போன்று உடையணிந்து, நள்ளிரவு நேரத்தில் அக்கத்தோலிக்கரிடம் சென்று, குழந்தைகளுக்குத் திருமுழுக்கு அளித்தல், திருமணங்களை ஆசீர்வதித்தல், திருப்பலி நிறைவேற்றல் போன்றவற்றைச் செய்து வந்தார். காவல்துறை அதிகாரிபோன்று ஆடையணிந்து, சிறை வைக்கப்பட்டிருந்த கத்தோலிக்கருக்கு, இறுதி அருளடையாளத்தை வழங்கி வந்தார். செல்வந்தர் வாழும் பகுதிகளில், ஏழைகளுக்கு உதவச் செல்லும்போது, பணக்கார வர்த்தகர் போலவே உடையணிந்து  சென்றார்.  இவ்வாறு, ஒடுக்கப்பட்ட கத்தோலிக்கர்க்கு, ஆன்மீக மற்றும் பொருளாதார உதவிகளைச் செய்தபோது, தனது இயேசு சபை தலைவர்களுக்குப் பணிந்தே நடந்தார்.

ஒருநாள், லூயி செருட்ரா என்ற இளைஞன், தனது காரில் குண்டு வைத்து, அப்போதைய மெக்சிகோவின் முன்னாள் அரசுத்தலைவர் ஒபரேகோனைக் கொல்ல முடிவுசெய்திருந்தான். ஏனெனில், ஒபரேகோன், திருஅவையின் எதிரியாகச் செயல்பட்டான். எதிர்பாராத விதமாக, குண்டு வைத்திருந்த நிலையில், தனது காரை, அருள்பணி புரோ அவர்களுக்கும், அவரது சகோதரருக்கும் விற்றுக் கொண்டிருந்தான். அந்நேரம் பார்த்து, ஒபரேகோனின் கார் அவ்வழியே கடந்து சென்றது. அப்போது, அருள்பணி புரோவுக்கு விற்கப்பட்ட காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துவிட்டது. இதில், ஒபரேகோனுக்குக் காயம் பெரிதாக இல்லை. எனினும், காவல்துறை, அருள்பணி புரோ அவர்களைக் குற்றவாளி எனத் தீர்ப்பிட்டு, எவ்வித சட்டமுறையான அணுகுமுறைக்கும் அனுமதியாது மரண தண்டனை வழங்கியது. இதைக் கேள்விப்பட்ட லூயி செருட்ரா என்ற அந்த இளைஞன், தானே குற்றவாளி என ஒத்துக்கொண்டான். ஆனால், போர்வீரர்கள் சிலர், அருள்பணி புரோ அவர்களை, சிறைக்கு வெளியே அழைத்து வந்து, பொது மக்கள் முன்னிலையில், நெஞ்சில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். அப்போது இந்த அருளாளர், தனது கண்களைக் கட்ட வேண்டாமென்று கேட்டுக்கொண்டு, கையில் செபமாலையை ஏந்தியவாறு, தன்னைக் கொலை செய்பவர்களை மன்னிப்பதாகச் செபித்தார். பின்னர், இரு கைகளை விரித்தவண்ணம்,"கிறிஸ்து அரசர் என்றென்றும் வாழ்க!(Viva Cristo Rey)"என்று அறிவித்துக்கொண்டிருந்தபோது, இவரது மார்பில் குண்டு பாய்ந்தது. அவரது உயிரும் பிரிந்தது. எல்லாவற்றிலும் கடவுளின் கரத்தைப் பார்க்கிறேன் என்று சொன்ன அருளாளர் மிக்கேல் புரோ அவர்கள், அநீதியாக தனக்கு வழங்கப்பட்ட மரணத்தை, கிறிஸ்து அரசருக்காக, மகிழ்வோடு ஏற்றார். 1927ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்ட அருள்பணி மிக்கேல் புரோ அவர்களை, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1988ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி, அருளாளராக அறிவித்தார். பொதுவில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றினால், கத்தோலிக்கருக்கு அது கேவலமாக இருக்கும் என, அப்போதைய மெக்சிகோ அரசுத்தலைவர் Calles, நினைத்து, அவ்வாறு செய்ய ஆணையிட்டார். ஆனால் அது, எதிர்மறை விளைவையே ஏற்படுத்தியது. “நீண்ட வாடிய முகம் கொண்ட புனிதர்களை நான் விண்ணகத்தில் சந்தித்தால், மெக்சிகோ தொப்பி நடனத்தால் நான் அவர்களை மகிழ்விப்பேன்” என்று,  விண்ணகத்திலும் நகைச்சுவை சொல்ல வாக்குறுதியளித்தவர் அருளாளர் மிகுவேல் அகுஸ்தீன் புரோ. சிறுவயதிலேயே, நகைச்சுவைகளால் மற்றவரை மகிழ்வித்த இத்தூயவர், மரணத்தையும் சிரித்த முகத்துடன், கிறிஸ்து அரசருக்காக ஏற்றார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.