2016-11-22 15:37:00

ருவாண்டா இனப்படுகொலைகளுக்காக திருஅவை மன்னிப்பு


நவ.22,2016. 1994ம் ஆண்டு ருவாண்டா நாட்டில் இடம்பெற்ற இனப்படுகொலைகளில் கிறிஸ்தவர்களின் நடவடிக்கைகளுக்காக ருவாண்டா திருஅவை மன்னிப்பை வேண்டுவதாக, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் நிறைவு நிகழ்ச்சியையொட்டி இந்த மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டுள்ள ருவாண்டா ஆயர்கள், 1994ம் ஆண்டின் இனக்கலவரத்தின்போது எட்டு இலட்சத்திற்கும் மேலான டுட்சி இனத்தவரும், ஹுட்டு இனத்தவரின் மிதவாதிகளும், ஹுட்டு இனத்தவரால் கொல்லப்பட்டதற்கு, பல கத்தோலிக்கர்களின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளும் காரணம் என தெரிவித்துள்ளனர்.

தங்கள் அயலவர்கள் வேற்று இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே அவர்களை கொலைச் செய்த கிறிஸ்தவர்களின் நடவடிக்கைகளுக்காக, மன்னிப்பை வேண்டுவதாக உரைக்கும் ஆயர்கள், அனைவரும் ஒரே குடும்பம் என்ற உணர்வு, மக்களில் இல்லாதிருந்தது குறித்த கவலையையும் வெளியிட்டுள்ளனர்.

எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்ட 1994ம் ஆண்டின் கலவரத்தின்போது, பல கிறிஸ்தவர்கள் டுட்சி இனத்தவர்க்கு அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றிய போதிலும், எண்ணற்ற கிறிஸ்தவர்கள் அவர்களைக் கொலை செய்வதிலும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

57 விழுக்காட்டினரை கத்தோலிக்கராகவும், 37 விழுக்காட்டினரை பிற கிறிஸ்தவ சபை அங்கத்தினர்களாகவும் கொண்டுள்ள ருவாண்டாவில், இனப்படுகொலைகளுக்குப் பின் மக்களிடையே இணக்கத்தையும் ஒப்புரவையும் கொணர்வதற்கு திருஅவையே அதிகம் பங்காற்றியுள்ளது.

ஆதாரம் : CNA/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.