2016-11-22 15:34:00

95 கோடி திருப்பயணிகள், புனிதக் கதவுகள் வழியாகச் சென்றுள்ளனர்


நவ.22,2016. திருஅவை நிறைவு செய்துள்ள இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், உலகெங்கும், ஏறக்குறைய 95 கோடி திருப்பயணிகள், புனிதக் கதவுகள் வழியாகச் சென்றுள்ளனர் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், Misecordia et misera, அதாவது, “இரக்கமும், அவலநிலையும்”என்ற திருத்தூது மடலை செய்தியாளர்கள் கூட்டத்தில், இத்திங்களன்று வெளியிட்டுப் பேசிய, புதியவழி நற்செய்தி அறிவிப்பை ஊக்குவிக்கும் திருப்பீட அவைத் தலைவர் பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா அவர்கள், இந்தப் புள்ளி விபரத்தைத் தெரிவித்தார்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், 90 கோடி முதல், 95 கோடி வரையிலான திருப்பயணிகள் புனிதக் கதவுகள் வழியாகச் சென்றுள்ளனர் என்றும், 156 நாடுகளிலிருந்து, 21,292,926 திருப்பயணிகள், உரோம் நகருக்கு, திருப்பயணம் மேற்கொண்டனர் என்றும், உரோம் நகரில், 36 நாடுகளிலிருந்து நான்காயிரம் தன்னார்வலர்கள் பணியாற்றினர் என்றும், பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த யூபிலி ஆண்டை அறிவித்தபோது, விசுவாசிகள், இரக்கத்தை அனுபவிக்க வேண்டுமென்று, சிறப்பாக ஆவல் கொண்டார், இந்த யூபிலி ஆண்டில், கிறிஸ்தவர்களின் ஒவ்வொரு நாள் வாழ்விலும், இரக்கம், முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது என்பதை உறுதியாகச் சொல்லலாம் என்றும், பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.

புனிதக் கதவுகள் வழியாகச் சென்றுள்ள திருப்பயணிகளில் 80 விழுக்காட்டினர், கத்தோலிக்கம், மிக ஆழமாக வேரூன்றியுள்ள நாடுகளைச் சேர்ந்த கத்தோலிக்கர் எனவும், உலகிலுள்ள ஏறத்தாழ மூவாயிரம் மறைமாவட்டங்களில், ஏறக்குறைய ஐம்பது விழுக்காடு, ஐரோப்பா, மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் உள்ளன எனவும் தெரிவித்தார் பேராயர் ஃபிசிக்கெல்லா.

ஏழு மொழிகளில் பார்க்கக்கூடிய யூபிலி இணையதளத்தை, 6,523,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் பார்த்துள்ளனர் என்றும், இதன் பக்கங்கள், 16,220,000 மில்லியன் தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளன என்றும், பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள், கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.