2016-11-21 16:49:00

திருத்தந்தையின் திருத்தூது மடல் "இரக்கமும், அவலநிலையும்"


நவ.21,2016. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை நிறைவு செய்யும் விதமாக, இந்த ஆண்டு பற்றிய சிந்தனைகளை உள்ளடக்கிய Misecordia et misera, அதாவது, “இரக்கமும், அவலநிலையும்”என்ற தலைப்பில், திருத்தூது மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Misecordia et misera என்பது, விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை, இயேசு சந்தித்த நிகழ்வு பற்றி புனித அகுஸ்தீன் விளக்கும்போது பயன்படுத்திய சொற்றொடராகும். விபசாரத்தில் பிடிபட்ட பெண், நம்பிக்கையோடு தனது எதிர்காலத்தை நோக்கவும், புதிய வாழ்வைத் தொடங்கவும் இயேசு உதவுகிறார் என தன் மடலில் கூறியுள்ள திருத்தந்தை,  இயேசு, பரிசேயர் ஒருவர் வீட்டில் விருந்துண்ணச் சென்றபோது, எல்லாராலும் பாவியாக அறியப்பட்ட பெண், இயேசுவின் காலடிகளில் நறுமணத் தைலம் பூசி, தனது கண்ணீரால் நனைத்ததையும், அப்பெண் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டதையும் தன் திருத்தூது மடலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மன்னிப்பு, இறைத்தந்தையின் அன்பை, மிகத் தெளிவாகக் காணக்கூடிய அடையாளம். இதனாலேயே, மன்னிப்பை நம்மில் யாருமே, வரையறைக்குட்பட்டதாக வைத்தல் கூடாது எனவும் தன் மடலில் கேட்டுள்ளார், திருத்தந்தை.

நாம் அனுபவித்துள்ள இறைவனின் இரக்கத்தின் வளமையை, மகிழ்வோடும், நம்பிக்கையோடும், ஆர்வத்தோடும் எவ்வாறு மிகச் சிறப்பாகத் தொடர்ந்து செயல்படுத்துவது என்பதைப் புரிந்துகொள்வதற்கான நேரம் வந்துள்ளது எனவும், தன் மடலில் கூறியுள்ளார், திருத்தந்தை.

இறைவன் நம்மீது வைத்துள்ள அன்பில் நம்பிக்கை வைத்து அவருக்கு நம் இதயங்களைத் திறப்போம் என விண்ணப்பித்துள்ள திருத்தந்தை, ஒப்புரவு அருளடையாளத்தில் நாம் பெறும் இறைவனின் மன்னிப்பு, அவரிடம் நாம் திரும்பி வரவும், அவர் நமக்கு நெருக்கமாக இருப்பதை அனுபவிக்கவும் நமக்கு அழைப்பு விடுக்கின்றது என்பதையும் எடுத்தியம்பியுள்ளார்.

இரக்கத்தின் வேறொரு முகம் ஆறுதல் என்று கூறியுள்ள திருத்தந்தை, துன்பம், புரிந்துகொள்ளாமை மற்றும்  வேதனைப்படும் அனைவருக்கும் ஆறுதலாக இருக்குமாறு எல்லாருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

திருத்தந்தையின் இம்மடல் திங்களன்றுதான் வெளியிடப்பட்டாலும், அதன் முதல் பிரதிகளை, ஞாயிறன்று மூவேளை செப உரைக்குப்பின், திருஅவைக்குள் அனைத்து இறைமக்களையும் குறிக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் திருத்தந்தை வழங்கினார்.

மனிலாப் பேராயர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே, Saint Andrews மற்றும் Edinburgh பேராயர் Leo Cushley, இரக்கத்தின் மறைப்பணியார்களாகப் பணியாற்றிய, காங்கோ குடியரசு மற்றும் பிரேசிலைச் சேர்ந்த இரு அருள்பணியாளர்கள்,  உரோம் மறைமாவட்டத்தில் பணியாற்றும் ஒரு தியாக்கோன், மற்றும், அவரது குடும்பத்தினர், மெக்சிகோ மற்றும் தென்கொரியாவைச் சேர்ந்த இரு அருள்சகோதரிகள், அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சார்ந்த ஒரு குடும்பம், திருமணமாகப்போகும் ஓர் இளைஞர், இளம்பெண், உரோம் மறைமாவட்ட பங்கில் மறைக்கல்வி ஆசிரியர்களாகப் பணியாற்றும் இரு அன்னையர், ஒரு மாற்றுத் திறனாளி, ஒரு நோயாளி ஆகியோர் திருத்தந்தையிடமிருந்து முதல் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.