2016-11-19 16:18:00

பகைவரை அன்புகூரவும், அவர்களுக்காக செபிக்கவும் பழகுவோம்


நவ.19,2016. கடந்த மாதம் ஒன்பதாம் தேதி தன்னால் அறிவிக்கப்பட்ட 17 புதிய கர்தினால்களுக்கு இச்சனிக்கிழமை காலை நடந்த திருவழிபாட்டுக் கொண்டாட்டத்தில், கர்தினால்களுக்குரிய பொறுப்பினை ஒப்படைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

17 பேரையும் கர்தினால்களாக உயர்த்திய இந்தக் கொண்டாட்டத்தில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு, தன் சீடர்களுக்கு வழங்கிய, இரக்கத்தின் நான்கு நிலைகளான, அன்பு கூர்தல், நன்மைச் செய்தல், ஆசீர்வதித்தல் மற்றும் செபித்தல் என்பவை குறித்து எடுத்துரைத்தார்.

இத்தகைய நான்கு செயல்களையும் நம் நண்பர்களுக்கும் நம் உறவினர்களுக்கும் நாம் ஆற்ற முடியும், ஆனால், இயேசுவோ எதிரிகளை அன்புகூரவும், நம்மை வெறுப்பவருக்கு நன்மை செய்யவும், நம்மை சபிப்பவரை ஆசீர்வதிக்கவும், நம்மை இகழ்ந்து பேசுபவருக்காக செபிக்கவும் நம்மிடம் கேட்கிறார் என்று கூறியத் திருத்தந்தை, நம் எதிரிகளுக்கு என்ன செய்ய முன்வருகிறோமோ, அதற்கு நேர்மாறானவற்றை நம்மிடம் இயேசு எதிர்பார்க்கிறார் என்றார்.

நம் எதிரிகள் என்பவர்கள், நம்மால் அன்பு கூரப்பட வேண்டியவர்கள் என எதிர்பார்க்கும் இறைவனின் மனதில், எதிரிகள் என்று யாரும் இல்லை, ஆனால் நாமோ சுவர்களையும் தடைக்கற்களையும் எழுப்பிக் கொண்டிருக்கிறோம், புலம்பெயர்ந்தொரையும் குடியேற்றதாரர்களையும் எதிரிகள் போல் நோக்குகிறோம் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களிடையே பகைமையை களையவும், ஒப்புரவை ஊக்குவிக்கவும், புதிய கர்தினால்கள் உழைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.