2016-11-19 17:01:00

ஈரோட்டில் 6 மாதத்தில் 68 குழந்தைத் திருமணங்கள் தடுப்பு


நவ.19,2016. கடந்த ஆறு மாதங்களில் ஈரோடு மாவட்டத்தில் நடக்கவிருந்த 68 குழந்தைத் திருமணங்கள் ‘சைல்டு லைன்’ (Child Line) அமைப்பு மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என ஈரோடு சைல்டு லைன் திட்ட இயக்குநர் அருண் அவர்கள் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல், அக்டோபர் வரை, 300 குழந்தைகளுக்கு சைல்டு லைன் அமைப்பு, உதவிகள் அளித்துள்ளது, 68 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

பிச்சையெடுத்து வந்த குழந்தைகள் 17 பேர், வீட்டை விட்டு ஓடி வந்த 32 பேர், குழந்தைத் தொழிலாளர் 14 பேர், காணாமல் போன 30 பேர், சலையோர குழந்தைகள் 5 பேர் என, பல்வேறு வழிகளில் துன்புற்ற குழந்தைகள், சைல்டு லைன் அமைப்பு மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

பள்ளியில் பயின்று, இடையே விலகிய குழந்தைகள் 27 பேர் கண்டறியப்பட்டு, மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், 18 குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, குழந்தைத் தொழிலாளர்கள், கல்வியில் இடைநிற்றல் குறைந்துள்ள அதே நேரத்தில் குழந்தைத் திருமணத்தின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சைல்டு லைன் அமைப்பிற்கு, குழந்தைகள் தொடர்பான புகார்களை 1098 என்ற எண்ணுக்கு 24 மணி நேரமும் தெரிவிக்கலாம்.

ஆதாரம் :  திஇந்து/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.