2016-11-19 15:06:00

இது இரக்கத்தின் காலம் – அச்சத்திலிருந்து ஆவலுக்கு அழைப்பு


1927ம் ஆண்டு வெளியான ஒரு புகழ்பெற்ற திரைப்படம், "The King of Kings". இந்த மௌனப்படம், இயேசு, இவ்வுலகில் வாழ்ந்த இறுதி வாரங்களைத் திரைக்குக் கொணர்ந்தது. இத்திரைப்படம், பல கோடி மக்களால் பாராட்டு பெற்றாலும், இதன் இயக்குனர், Cecil B.DeMille அவர்கள், தனக்கு கடிதமாக வந்து சேர்ந்த ஒரே ஒரு பாராட்டு மட்டுமே தன் உள்ளத்தைத் தொட்டதென்று கூறினார். அந்த மடலை எழுதியவர், இறக்கும் நிலையில் இருந்த ஒரு பெண்.

ஒரு சில நாட்களே வாழப்போகிறோம் என்பதை உணர்ந்த அந்தப் பெண், சக்கர நாற்காலியில் அமர்ந்தவண்ணம் இத்திரைப்படத்தைப் பார்த்தார். பின்னர், அவர் இயக்குனர் Cecil அவர்களுக்கு ஒரு மடல் அனுப்பினார். "The King of Kings திரைப்படத்திற்காக உங்களுக்கு மிக்க நன்றி. சாகப்போவதை எண்ணி இதுவரை பயந்த என் மனதில், இப்போது, ஆவலுடன் மறுவாழ்வை எதிர்பார்க்கும் மகிழ்வு வந்துள்ளது" என்று அப்பெண்மணி தன் மடலில் எழுதியிருந்தார்.

அச்சத்திலிருந்து நம்மை ஆவலுக்கு அழைத்துச் செல்வது, இறைவனின் இரக்கம். மறுவாழ்வை ஆவலுடன் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள, இரக்கத்தின் காலம், தகுந்ததொரு தருணம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.