2016-11-18 15:31:00

பணத்தாசை கொண்ட அருள்பணியாளரை மக்கள் மன்னிக்கமாட்டார்கள்


நவ.18,2016. கிறிஸ்தவ எளிமை இறைவன் தரும் ஒரு வரம் என்றும், பணத்தின் மீது பற்றுதல் கொண்டுள்ள அருள் பணியாளரை மக்கள் மன்னிக்கமாட்டார்கள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று வழங்கிய மறையுரையில் கூறினார்.

இவ்வெள்ளி காலையில் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், எருசலேம் கோவிலில் விற்பனை செய்தோரையும், பணம் மாற்றியோரையும் இயேசு விரட்டியடித்த நற்செய்திப் பகுதியை மையமாக வைத்து, திருத்தந்தை தன் மறையுரையை வழங்கினார்.

இறையரசைக் குலைப்பதற்காக ஊன்றப்பட்ட விதை, பணம் என்று கூறியத் திருத்தந்தை, பணத்தை 'எதிர் கிறிஸ்து' அல்லது, 'எதிர் கடவுள்' என்று கூறுவது பொருத்தம் என்றும், பொய் தெய்வ வழிபாட்டை மேற்கொள்வோரின் உள்ளங்களில் பணமே வீற்றிருக்கிறது என்றும் எடுத்துரைத்தார்.

இறைவன் வாழும் இல்லங்களில் பணம் நுழையும்போது, அங்கிருந்து இறைவன் வெளியேற்றப்படுகிறார் என்று தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பணத்தைக் கோவிலுக்குள் நுழைக்கும் அருள் பணியாளர்கள், இறைவனின் இல்லத்தை பாழடையச் செய்வர் என்ற எச்சரிக்கை விடுத்தார்.

அருள்பணியாளர்களிடம் விளங்கும் நல்லவற்றைப் போற்றிக் கொண்டாடும் விசுவாசிகள், அவரிடம் பணப்பற்று என்ற நாற்றம் அடிப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும் தன் மறையுரையில் தெளிவுபடுத்தினார், திருத்தந்தை.

இவ்வெள்ளியன்று சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியில், திருப்பீடத்தின் தூதரகப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.