2016-11-18 15:58:00

எல் சால்வதோர் இயேசு சபையினருக்கு, இஸ்பெயின் உயரிய விருது


நவ.18,2016. எல் சால்வதோர் நாட்டின் தலைநகர், சான் சால்வதோரில், இயேசு சபையினரால் நடத்தப்படும் மத்திய அமெரிக்க பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் மையத்திற்கு, இஸ்பெயின் நாட்டின் உயரிய விருது, நவம்பர் 15, இச்செவ்வாயன்று வழங்கப்பட்டது.

இஸ்பெயின் அரசர், 6ம் பிலிப் அவர்களின் சார்பாக, எல் சால்வதோர் நாட்டின் இஸ்பானியத் தூதர், இவ்விருதினை வழங்கினார்.

எல் சால்வதோர் நாட்டின் கத்தோலிக்கர்கள் விடுத்த அழைப்பின்பேரில், 1965ம் ஆண்டு, இயேசு சபையினர் நிறுவிய மத்திய அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில், 1985ம் ஆண்டு, மனித உரிமைகள் மையம் உருவாக்கப்பட்டு, எல் சால்வதோரில் வறுமைப்பட்ட தொழிலாளிகளின் உரிமைகளுக்காகப் போராடி வந்தது.

இந்த மையம் மேற்கொண்ட பணிகள் காரணமாக, இந்தப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய 6 இயேசு சபையினரும், உடன் உழைப்பாளர்கள் 2 பேரும், 1989ம் ஆண்டு, நவம்பர் 16ம் தேதி அதிகாலையில், எல் சால்வதோர் இராணுவ ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டனர்.

கடந்த 31 ஆண்டுகளாக, இந்த மனித உரிமைகள் மையம், வீடற்றோர், நிலமற்றோர், வறியோர் ஆகியோரின் சார்பில் போராடி வந்ததற்காக இஸ்பெயின் நாட்டின் உயரிய விருது வழங்கப்படுகிறது என்று, இஸ்பெயின் தூதரகம் வெளியிட்ட ஓர் அறிக்கை கூறுகிறது. 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.