2016-11-18 16:02:00

இறைவனின் உள்ளக்கதவு எப்போதும் திறந்துள்ளது- கர்தினால் தாக்லே


நவ.18,2016. புனிதக் கதவு மூடப்பட்டாலும், இறைவனின் உள்ளக்கதவு எப்போதும் திறந்தே உள்ளது என்பதை, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு தனக்குச் சொல்லித் தருகிறது என்று, அகில உலக காரித்தாஸ் அமைப்பின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.

உரோம் நகரில் நடைபெற்ற, அகில உலக காரித்தாஸ் அமைப்பின் ஆண்டு கூட்டத்தின் இறுதியில், கர்தினால் தாக்லே அவர்கள் வழங்கிய பேட்டியில், இறைவன் இரக்கத்தின் பல பரிமாணங்களை, எளிய மக்கள் வழியே கற்றுக்கொள்ள இந்த யூபிலி ஆண்டு வழிவகுத்தது என்று கூறினார்.

இத்தாலியில் நிலநடுக்கத்தால் பாதிக்கபப்ட்ட பகுதிகளை, காரித்தாஸ் தலைவர் என்ற முறையில், அண்மையில் பார்வையிட்டதைக் குறித்து கேள்வி எழுந்தபோது, உலகெங்கும் காணப்படும் துன்பத்தின் முகம் ஒன்றுதான் என்றாலும், அத்துன்பத்தின் நடுவே, மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை, தான் கற்றுக்கொண்ட மிகச் சிறந்த பாடம் என்று, கர்தினால் தாக்லே அவர்கள், பதில் அளித்தார்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட Norcia பகுதி, புலம்பெயர்ந்தோர் கூடியுள்ள லெஸ்போஸ் தீவு, லெபனான் நாடு அனைத்திலும், இளையோர் நம்பிக்கையுடன் ஆற்றும் பணிகள் தன்னை அதிகம் கவர்ந்ததென்று, கர்தினால் தாக்லே அவர்கள், தன் பெட்டியில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

"கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொண்டேன் - என் வாழ்க்கை, என் நம்பிக்கைகள்" என்ற தலைப்பில், கர்தினால் தாக்லே அவர்களின் சுய வரலாறு, உரோம் நகரின் Civiltà Cattolica என்ற மாத இதழ் தலைமையகத்தில் நவம்பர் 18, இவ்வெள்ளி மாலையில், வெளியாகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.