2016-11-18 15:37:00

இது இரக்கத்தின் காலம்...: நாவல்பழம்தான் எத்தனை ருசி!


அந்த குரு வயதாகி மரணப் படுக்கையில் இருந்தபோது சீடர்களைக் கூப்பிட்டார். “இன்று மாலைக்குள் இறந்துவிடுவேன்” என்று கூறிவிட்டார். சீடர்களுக்கோ கவலை. மூத்த சீடர் ஒருவர் திடீரென கடைவீதிக்குப் புறப்பட்டார். ‘‘ஏய் என்ன மடத்தனம் பண்ணுகிறாய், குரு மரணப்படுக்கையில் கிடக்கும்போது அப்படி என்ன அவசரமாக வாங்க வேண்டியிருக்கு?’’ என்று திட்டினர், மற்றவர்கள். குரு கண்களைத் திறப்பதும், யாரையோ தேடுவதும், பின் கண்களை மூடிக்கொள்வதுமாக இருந்தார். மூத்த சீடர் வந்ததும், ‘‘வந்து விட்டாயா… எங்கே நாவல்பழம்?’’ என்றார். அவர் கையில் நாவல் பழத்தைக் கொடுத்ததும், சற்றும் நடுக்கமின்றி, மலர்ச்சியோடு அதை வாங்கி ருசித்து தின்னத் தொடங்கிவிட்டார். இன்னொரு சீடர் குருவிடம் பணிந்து, ‘‘ஐயா, தாங்கள் சீக்கிரமே இந்த உலகை விட்டுப் பிரியப் போகிறீர்கள். நாங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய தங்களின் இறுதி உபதேசம் என்ன?’’ என்று கேட்டார். எல்லோரும் அவர் முகத்தையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். குரு சிரித்தபடி, ‘‘இந்த நாவல்பழம் என்ன அருமையான சுவையுள்ளதாக இருக்கிறது,’’ என்று சொல்லிவிட்டு, தன் மூச்சை நிறுத்திக் கொண்டார்!

சீடருக்கு அவர் சொல்லாமல் சொல்லித்தந்த பாடம் இதுதான் - ‘வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து, ருசித்து வாழப் பழகுங்கள்’.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.