2016-11-17 15:36:00

வர்த்தக உலகிற்கு முன்னுள்ள முக்கியமான சவால், இரக்கமே


நவ.17,2016. வர்த்தக முயற்சிகள் உட்பட, அனைத்து மனித செயல்பாடுகளும், இரக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாக, இறைவனின் அன்பில் பங்குபெறும் ஒரு முயற்சியாக இருக்கிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொழில் அதிபர்கள், மற்றும் வர்த்தகர்களிடம் கூறினார்.

திருப்பீட நீதி, அமைதி அவையின் அழைப்பை ஏற்று, கத்தோலிக்கத் தொழில் முனைவோர் கழகத்தின் அனைத்துலக மாநாடு ஒன்றில் கலந்துகொள்ள, உரோம் நகருக்கு வருகை தந்திருக்கும் 500க்கும் அதிகமான தொழில் அதிபர்களையும், வர்த்தகர்களையும், இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

UNIAPAC என்றழைக்கப்படும் இந்த அமைப்பின் அனைத்துலக மாநாடு, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் இறுதியில் இடம்பெறுவதை, இறைவனின் திட்டமாக தான் காண்பதாகக் கூறியத் திருத்தந்தை, சவால்கள் நிறைந்த வர்த்தக உலகிற்கு முன்னுள்ள ஒரு முக்கியமான சவால், இரக்கமே என்று எடுத்துரைத்தார்.

பணத்தை சரியான வழியில் பயன்படுத்துதல், நேர்மையுடன் செயல்படுதல், உடன்பிறந்த உணர்வுடன் செயலாற்றுதல் என்ற மூன்றும், வர்த்தக உலகின் மிகப்பெரும் சவால்கள் என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இந்த மூன்று சவால்களையும் எவ்விதம் சந்திப்பது என்பதை, தன் உரையில் விளக்கிக் கூறினார்.

"பணம், தீயோனின் உரமாகப் பயன்படுகிறது" என்று, தான் அடிக்கடி கூறிவந்துள்ளதைக் குறிப்பிட்டத் திருத்தந்தை, செல்வத்தைக் குவித்துவைப்பதை, திருஅவை, பல்வேறு காலங்களில் எதிர்த்து வந்துள்ளது என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.

அயலவர் தேவைக்குப் பயன்படுவதே, செல்வத்தின் மிக முக்கிய நோக்கம் என்பதை, பல நூற்றாண்டுகளாக திருஅவை கூறிவந்துள்ளது என்றும், செல்வம் எப்போதும் ஒருவருக்குப் பணிவிடை செய்யவேண்டுமே தவிர,  ஆட்சி செலுத்தக்கூடாது என்றும், திருத்தந்தை தொழில் அதிபர்களிடம் எடுத்துரைத்தார்.

தன்னிலேயே நல்லது, தீயது என்ற மதிப்பீடுகள் ஏதுமற்ற செல்வம், மனிதர்கள் பயன்படுத்தும் காரணங்கள், வழிகள் ஆகியவற்றால், நல்லதாக, தீயதாக மாறுகின்றது என்று திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

ஊழல், நம் சமுதாயத்தில், ஒரு கொள்ளைநோய்போல் பரவியுள்ளது என்று குறிப்பிட்டத் திருத்தந்தை, செல்வத்தை, பீடமேற்றி வழிபடும் நேரங்களில், ஊழல், பல்வேறு வடிவங்களில், மனித குடும்பத்தை சீர்குலையச் செய்கிறது என்று, வருத்தத்துடன் கூறினார்.

அரசியல் உலகத்தில் மட்டும் ஊழல் நிலவுவதில்லை, மாறாக, வர்த்தகம், நிறுவனங்கள், மத அமைப்புக்கள், அனைத்திலும் ஊழல் பரவியுள்ளது என்று, தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமுதாய முன்னேற்றத்திற்கு, ஊழல் ஒழிப்பு, ஒரு முக்கிய தேவை என்று வலியுறுத்தினார்.

செல்வம் மிக்க சக்கேயு, இயேசுவைச் சந்தித்த நிகழ்வை, இருவாரங்களுக்கு முன் நற்செய்தியில் வாசித்தோம் என்பதை தன் உரையின் இறுதியில் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சக்கேயு ஏறி அமர்ந்த அத்தி மரத்தைப்போல, தொழில் அதிபர்களும், தொழில் முனைவர்களும் மேற்கொண்டுள்ள இந்தச் சந்திப்பு, ஓர் அத்தி மரத்தைப் போல் அவர்களுக்கு உதவி செய்து, அவர்கள் இயேசுவை சந்திக்க வழிவகுப்பதாக என்று, தன் உரையை நிறைவு செய்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.