2016-11-17 15:24:00

திருத்தந்தையுடன் கிழக்கு அசீரிய சபையின் முதுபெரும் தந்தை


நவ.17,2016. "நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும், ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!" (உரோமையர் 1,7) என்று வாழ்த்தும் திருத்தூதர் பவுலின் வார்த்தைகளுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவரகள், கிழக்கு அசீரிய சபையின் முதுபெரும் தந்தை 3ம் Mar Gewargis அவர்களை வாழ்த்தினார்.

நவம்பர் 16, இப்புதன் முதல், 19, இச்சனிக்கிழமை முடிய, கிழக்கு அசீரிய சபையின் முதுபெரும் தந்தை 3ம் Mar Gewargis அவர்கள், உரோம் நகரில் மேற்கொண்டுள்ள ஒரு பயணத்தில், இவ்வியாழன் காலை வத்திக்கானுக்கு வருகை தந்து, திருத்தந்தையை நேரில் சந்தித்தார்.

முதுபெரும் தந்தையையும், அவருடன் வந்திருந்தோரையும் வாழ்த்தி வரவேற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிரியாவிலும், ஈராக்கிலும் துன்புறும் ஆயிரக்கணக்கான மக்கள், குறிப்பாக, குழந்தைகள், மற்றும் பெண்கள் ஆகியோருக்கு நம் இணைந்த செபங்கள் உதவட்டும் என்று, தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, தங்கள் சிலுவையைச் சுமந்து, துன்பப்பாதையில் தினமும் நடந்துவரும் நம் சகோதர, சகோதரிகள், எத்தகையத் துன்பத்திலும் ஆண்டவரை விட்டு விலகாமல் வாழ்வது எப்படி என்று நமக்குச் சொல்லித்தருகின்றனர் என்று, திருத்தந்தை கூறினார்.

வேறுபாடுகள் உள்ள நமது சபைகளை ஒருங்கிணைப்பது, அனைத்து கிறிஸ்தவர்களும் சிந்தும் இரத்தம் என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, கத்தோலிக்கத் திருஅவையும், கிழக்கு அசீரிய சபையும் ஒன்றிப்பு நோக்கி எடுத்துவரும் முயற்சிகள் தன்னை மகிழ்விப்பதாகக் கூறினார்.

விசுவாச அறிக்கைகளில் ஒருமித்த கருத்துக்களை வெளிப்படுத்தும் இவ்விரு சபைகளும், திருப்பலியிலும், திருவிருந்திலும் இணைந்து வரும் நாளை தான் ஆவலோடு எதிர்பார்த்திருப்பதாக, திருத்தந்தை தன் உரையில் குறிப்பிட்டார்.

இறைவனால் குணமாக்க இயலாத காயங்கள் ஏதுமில்லை என்ற நம்பிக்கையுடன், நம்மிடையே உருவான வரலாற்றுக் காயங்களை அவரிடம் ஒப்படைத்து, அவரது குணமளிக்கும் கரங்கள் நம்மைத் தொடும்படி வேண்டுவோம் என்று, திருத்தந்தை தன் உரையின் இறுதியில் கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.