2016-11-17 15:17:00

இயேசுவின் இதயத்தை இன்றும் புண்படுத்துகிறோம் - திருத்தந்தை


நவ.17,2016. வரலாற்றில், நம்பிக்கையைக் குலைக்கும்வண்ணம் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும், இயேசுவின் இதயத்தை இன்றும் புண்படுத்துகின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை வழங்கிய மறையுரையில் கூறினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றியத் திருப்பலியில், எருசலேம் நகரை நோக்கி இயேசு கண்ணீர் வடித்தார் என்ற நற்செய்திப் பகுதியை மையப்படுத்தி திருத்தந்தை வழங்கிய மறையுரையில், அன்று இறைவனின் உள்ளத்தைப் புண்படுத்திய இஸ்ரயேல் மக்களைப் போலவே நாமும் வாழ்கிறோம் என்று கூறினார்.

அமைதிக்குரிய வழியை அறியாமல், ஆண்டவனை அடையாளம் கண்டுகொள்ளாமல் வாழ்ந்த எருசலேம் நகரைப்போலவே, இன்றும் இறைவனை அடையாளம் காண விரும்பாமல் நாம் வாழ்கிறோம் என்று திருத்தந்தை தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் குறுக்கிட்டு, நம் இதயக் கதவைத் தட்டி நிற்கும் ஆண்டவரை அடையாளம் காண மறுத்து வாழ்கிறோம் என்று குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மில் எத்தனை பேர், அன்றாட வாழ்வைத் திரும்பிப்பார்க்க, ஆன்ம ஆய்வு மேற்கொள்கிறோம் என்ற கேள்வியை தன் மறையுரையில் எழுப்பினார்.

“நான் அஞ்சுகிறேன். ஏனெனில், என் இறைவன் என்னைக் கடந்து செல்லும்போது, அவரை அடையாளம் காணமுடியாமல் போய்விடுவேனோ என்று அஞ்சுகிறேன்” என்று புனித அகஸ்தீன் கூறியதை தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இறைவனின் வரவைப் புரிந்துகொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள செபிப்போம் என்று அழைப்பு விடுத்தார். 

ஆதாரம் :  / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.