2016-11-16 17:00:00

பன்னாட்டு EXPO 2017ல் திருப்பீடம் உருவாக்கும் அரங்கம்


நவ.16,2016. 2017ம் ஆண்டு நடைபெறவிருக்கும் பன்னாட்டு EXPO கண்காட்சியில், "பொதுநலனுக்காக பயன்படும் சக்தி - நமது பொதுவான இல்லாததை பேணுதல்" என்ற தலைப்பில், திருப்பீடம் பங்கேற்கும் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

கசக்ஸ்தான் நாட்டின் தலைநகரான Astanaவில், "வருங்கால சக்தி" என்ற மையக்கருத்துடன், 2017ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி முதல், செப்டம்பர் 10ம் தேதி முடிய நடைபெறவிருக்கும் பன்னாட்டு EXPO கண்காட்சியில், திருப்பீடம் பங்கேற்கும் என்பதை, திருப்பீட நீதி, அமைதி அவைத்தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் இப்புதனன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்தார்.

2008ம் ஆண்டு இஸ்பெயின் நாட்டின் சரகோசா நகரில் நடைபெற்ற EXPOவில் தண்ணீர் மையப்பொருளாக இருந்ததென்றும், 2015ம் ஆண்டு மிலான் நகரில் நடைபெற்ற EXPOவில் உணவு மையப்பொருளாக அமைந்ததென்றும், 2017ம் ஆண்டு நடக்கவிருக்கும் EXPOவில் "வருங்கால சக்தி" மையப்பொருளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதென்றும் கர்தினால் டர்க்சன் அவர்கள் எடுத்துரைத்தார்.

இயற்கைச் சக்திகள், அணுசக்தி, தொழில்நுட்பச் சக்தி என்ற ஒட்டுமொத்த சக்திகளின் செயல்பாடுகள், இன்றைய உலகிற்கு பெரும் சவால்களை அளிக்கின்றன என்பதை செய்தியாளர்களிடம் கூறிய கர்தினால் டர்க்சன் அவர்கள், இச்சக்திகளை திறம்பட பயன்படுத்தி, அனைத்து மக்களின் நலனை உறுதி செய்வதே, திருப்பீடம் சொல்லவிரும்பும் செய்தி என்று வலியுறுத்தினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள 'இறைவா உமக்கேப் புகழ்" என்ற திருமடலும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் 2009ம் ஆண்டு வெளியிட்ட "உண்மையில் அன்பு" (Caritas in Veritate) திருமடலும், EXPO 2017ல் திருப்பீடம் அமைக்கவிருக்கும் அரங்கத்தின் அடித்தளமாக அமையும் என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் செய்தியாளர்களிடம் விளக்கினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.