2016-11-16 12:34:00

இது இரக்கத்தின் காலம்:மனிதரை நம்புவதைவிட இறைவனை நம்புவது..


ஒரு மடத்தில் இருந்த துறவி, ஏழைகளுக்கு விருந்தளிக்க விரும்பினார். ஆனால், கையில் பணமில்லை. "கடவுளே! விருந்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்று மட்டும் வேண்டிக்கொண்டார். தன் சீடர்களை அழைத்து, விருந்துக்கான ஏற்பாட்டைச் செய்யும்படி கூறினார். விருந்து அன்று ஏராளமான முதியவர்கள் ஆசையோடு காத்திருந்தனர். தட்டு, தண்ணீர் வைத்தாகி விட்டது. சீடர்கள், தங்கள் மனதிற்குள், "நம் குருவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது போலும்! உணவே இல்லாமல் வெறும் தட்டுமுன் முதியோர்கள் அமர்ந்தால், அவர்கள் ஏமாந்து போவார்கள் என்பதுகூட இவருக்குத் தெரியாதா...'' என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டனர். நேரம் கடந்தது. சீடர் ஒருவர் குருவிடம், "இப்போது என்ன செய்வது?'' என்றார். "கவலை வேண்டாம். உணவு அளிப்பது கடவுளின் பொறுப்பு. எல்லாரையும் அமரச் சொல்லுங்கள்'' என்றார். என்ன நடக்கப்போகிறதோ என எல்லாரும் திகைத்து நிற்க, குரு மனஒருமையுடன் கடவுளைப் பிரார்த்தித்தார். அப்போது, வாசலுக்கு வாகனம் ஒன்று வந்தது. அதில் தேவையான நிறைய உணவும் இருந்தது. அந்த வண்டியை ஓட்டி வந்தவர் குருவிடம், "குருவே! எங்கள் முதலாளி இந்த விருந்தை உங்களிடம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்'' என்றார். அப்போது குரு, "பெரிய முதலாளியான கடவுளின் உத்தரவால், இந்த உணவு கிடைத்துள்ளது. அவருக்கு நன்றி சொல்லி விருந்தைப் பரிமாறுவோம்'' என்று சீடர்களுக்கு உத்தரவிட்டார். எதிர்பார்த்ததைவிட, விருந்து நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. நடந்த விடயம் இதுதான். பணக்காரரான அந்த முதலாளி, தன் நண்பர்களுக்கு விருந்து கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் ஏதோ காரணத்தினால் விருந்து தடைபட்டதால், உணவை ஏழைகளுக்கு வழங்க முடிவெடுத்து அனுப்பி வைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.