2016-11-15 15:16:00

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 47


இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு, நவம்பர் 20, வருகிற ஞாயிறன்று நிறைவுபெறுகிறது. கடந்த ஆண்டு, டிசம்பர் 8, அமல அன்னை மரியா பெருவிழாவன்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதக் கதவைத் திறந்து, இரக்கத்தின் சிறப்பு யூபிலியைத் துவக்கி வைத்தார். இவ்வாண்டு நவம்பர் 20, கிறிஸ்து அரசர் திருவிழாவன்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், புனிதக் கதவை மூடுவதன் வழியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த யூபிலி ஆண்டை நிறைவுக்குக் கொணர்கிறார்.

திருஅவை வரலாற்றில், இதுவரை கொண்டாடப்பட்ட பல யூபிலி ஆண்டுகளை, பொதுவாக, திருத்தந்தையர், கர்தினால்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவறத்தார், பக்த சபையினர், இரக்கப் பணியாளர்கள், பொதுநிலையினர் ஆகியோர் கூடிவந்து சிறப்பித்துள்ளனர். இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் இறுதி இருவாரங்கள் வத்திக்கானில் கூடியவர்களைப் பார்க்கும்போது, நாம் கொண்டாடிவந்த யூபிலி வரலாற்றில் ஒரு மாற்றம் நிகழ்ந்ததைக் காண முடிகிறது. ஆம், நவம்பர் 5, 6 மற்றும் நவம்பர் 11, 12, 13 ஆகிய நாள்களில், இதுவரை, திருஅவை வரலாற்றின் யூபிலி விழாக்களில் கலந்துகொள்ளாத விருந்தினர்கள், வத்திக்கானுக்கு வரவழைக்கப் பட்டிருந்தனர். அவர்கள் – சிறைப்பட்டோர் மற்றும், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோர்.

'யூபிலி' கொண்டாட்டங்கள் ஏன் உருவாக்கப்பட்டன என்ற கேள்விக்கு விவிலியத்தில், விடை தேடும்போது, சிறைப்பட்டோர் மற்றும், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோர் அங்கு கூறப்பட்டுள்ளனர். "ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிப்பது, சிறைப்பட்டோர் விடுதலை அடைவது, பார்வையற்றோர் பார்வை பெறுவது, ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவது" (லூக்கா 4:18-19) ஆகியவை, அருள்தரும் ஆண்டில் நிகழவேண்டிய அற்புதமானப் பணிகள் என்று இயேசு அறிவித்ததை, நாம், லூக்கா நற்செய்தி 4ம் பிரிவில் வாசிக்கிறோம். இந்தப் பட்டியலில், சிறைப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் அல்லது, ஒதுக்கப்பட்டோர் இடம்பெற்றுள்ளனர். சிறைப்பட்டோரும், ஒதுக்கப்பட்டோரும் யூபிலியைக் கொண்டாட, அதிகாரப்பூர்வமாக, வத்திக்கானுக்கு அழைக்கப்பெறுவது, திருஅவை வரலாற்றில் இதுவே முதல் முறை என்று, இரக்கத்தின் யூபிலி ஆண்டு நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் பேராயர் ரீனோ பிசிக்கெல்லா (Rino Fisichella) அவர்கள் கூறியுள்ளார்.

நவம்பர் 6, கடந்த ஞாயிறு, காலை 10 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் சிறைப்பட்டோரின் யூபிலித் திருப்பலியை திருத்தந்தை நிறைவேற்றினார். 12 நாடுகளிலிருந்து வத்திக்கானுக்கு வருகை தந்த கைதிகள், அவர்களது குடும்பத்தினர், சிறைக்காவலர்கள், கைதிகளுக்குப் பணியாற்றும் அருள்பணியாளர்கள் என, 4000த்திற்கும் அதிகமானோர், இந்த யூபிலித் திருப்பலியில் கலந்துகொண்டனர்.

அதேவண்ணம், நவம்பர் 13ம் தேதி ஞாயிறு காலை 10 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், திருத்தந்தை ஆற்றிய திருப்பலியில், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோர் 6000த்திற்கும் அதிகமாகக் கலந்துகொண்டனர்.

எந்த ஒரு நிகழ்விலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களைச் சந்திக்கும் வேளைகளில், அவராகச் சென்று மக்களை அணைத்து ஆசீரளிப்பதும், அல்லது, மக்கள் தாங்களாகவே வந்து திருத்தந்தையை அணைப்பதும், குறிப்பாக, குழந்தைகளும், சிறுவர், சிறுமியரும் தயக்கமேதுமின்றி அவரிடம் தாவிச் செல்வதும் நாம் அடிக்கடி பார்த்துவரும் காட்சிகள். நவம்பர் 11, கடந்த வெள்ளியன்று, வத்திக்கானில் நிகழ்ந்த ஒரு காட்சி, கட்டாயம் பலரின் மனதில் முதல் முறை பதிந்த ஓர் அற்புத அனுபவமாக அமைந்திருக்கும்.

நவம்பர் 11, வெள்ளியன்று, அருளாளர் 6ம் பவுல் அரங்கத்தில், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோர், ஆயிரக்கணக்கில் கூடியிருந்தனர். அச்சந்திப்பில், வறியோர் இருவர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தது, அதன்பின் திருத்தந்தை உரை வழங்கியது அகியவை வழக்கம்போல் நிகழ்ந்தன. பின்னர், மேடையில் ஓர் அற்புத நிகழ்வு இடம்பெற்றது. அதாவது, மேடையில், திருத்தந்தைக்கு இருபுறமும் அமர்ந்திருந்த வறியோர், திருத்தந்தையைச் சூழ்ந்து நின்று, அவரது தோள்களில் கரங்களை வைத்து செபித்தனர். வறியோரின் கரங்கள் திருத்தந்தையின் தோள்மீது பதிந்திருக்க, திருத்தந்தை கண்களை மூடி செபித்தது, பலருக்கு, 2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, புனித பேதுரு வளாகத்தில் நிகழ்ந்ததை நினைவுக்குக் கொணர்ந்திருக்கும்.

வரலாற்று சிறப்புமிக்க அந்த நாளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப்பணிக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் மேல் மாடத்தில் முதல்முறையாக மக்களைச் சந்திக்க வந்தார். அப்போது, உரோமைய ஆயராகிய தான், மக்களுக்கு ஆசீர் வழங்குவதற்கு முன், மக்கள் தனக்காக செபிக்கும்படி விண்ணப்பித்து, வளாகத்தில் கூடியிருந்தோர் முன்னிலையில், திருத்தந்தை தலைவணங்கி நின்றார்.

அன்று மக்களின் செபங்களுக்காகத் தலைவணங்கி நின்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த வெள்ளியன்று, வறியோர் நடுவில் மீண்டும் தலைவணங்கி நிற்க, அவர்கள், அவரது தோள் மீது கரங்களை வைத்து செபித்தனர். திருத்தந்தையருக்காக வறியோர் வேண்டிவந்துள்ளனர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், அவர்கள் திருத்தந்தை ஒருவரின் தோள்மீது கரங்களைவைத்து செபித்தது, திருஅவை வரலாற்றில், பல நூற்றாண்டுகளாக இடம் பெறாத ஒரு நிகழ்வு என்று நிச்சயம் சொல்லலாம்.

நவம்பர் 11ம் தேதி, திருத்தந்தை வழங்கிய உரையில் அவர் கூறிய ஒரு சில கருத்துக்கள் நம் உள்ளத்தில் ஆழமாய்ப் பதிகின்றன. கிறிஸ்டியன், இராபர்ட் என்ற இருவர் அன்றையப் பகிர்வில் கூறிய கருத்துக்களை அடித்தளமாகக் கொண்டு, திருத்தந்தை, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். வறியோர் இவ்வுலகிற்குச் சொல்லித்தரக் கூடிய நான்கு பாடங்களைக் குறித்து, திருத்தந்தை மனம் திறந்து  பேசினார். கனவு காணுதல், அழகை உணர்தல், உறுதுணையாக இருத்தல், அமைதிக்குச் சான்று பகிர்தல் என்ற நான்கு வழிகளை, வறியோர் இவ்வுலகிற்குச் சொல்லித்தர வேண்டும் என்று, திருத்தந்தை கேட்டுக்கொண்டார். கனவு காண்பதிலும், அக்கனவுகளை நனவாக்க தீவிர ஆர்வம் கொள்வதிலும், மனிதப் பிறவிகள் என்ற முறையில், வறியோருக்கும் செல்வந்தருக்கும் வேறுபாடு இல்லை என்று, கிறிஸ்டியன் சொன்னதை வைத்து, திருத்தந்தை தன் முதல் கருத்தைப் பகிர்ந்தார்:

"என்னைப் பொருத்தவரை, எவர் ஒருவர், கனவு காணும் சக்தியை இழக்கிறாரோ, அவர்தான் உண்மையான ஏழை. கூரை ஏதுமின்றி திறந்தவெளியில் படுத்திருக்கும் நீங்கள் கனவு காண்கிறீர்கள். அத்தகைய அனுபவம் எனக்கு இல்லை. ஆனால், நீங்கள் கனவு காண்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். உரோம் நகருக்குச் செல்லவேண்டும் என்று உங்களில் பலர் கனவு கண்டிருப்பீர்கள். இன்று அது நிறைவேறியுள்ளது. இந்த உலகம் மாறும் என்று கனவு காண்கிறீர்கள். அதுவும் நடக்கும் என்று நம்புங்கள்.

யாரால் கனவுகாண முடியும்? தேவையில் யார் இருக்கிறார்களோ, அவர்களால்தான் கனவுகாண முடியும்.... எனவே, நான் உங்களுக்கு ஒரு விண்ணப்பத்தை முன்வைக்கிறேன். கனவு காண்பது எப்படி என்று எங்களுக்குச் சொல்லித்தாருங்கள். உறுதியான கூரைகளுக்குக் கீழ் படுத்துக்கொண்டு, உணவு, மருந்து என்பனவற்றில் தேவைகள் ஏதுமின்றி இருக்கும் எங்களுக்கு, கனவு காண்பது பற்றி சொல்லித் தாருங்கள். நற்செய்தியின் அடிப்படையில் கனவு காண்பது எப்படி என்று எங்களுக்குச் சொல்லித் தாருங்கள்."

கனவு காண்பதைக் குறித்து இவ்வாறு பேசியத் திருத்தந்தை, 'இவ்வுலக வாழ்வு அழகானது' என்று இராபர்ட் சொன்ன கருத்தைப் பாராட்டினார். பின்னர் அழகையும், மனித மாண்பையும் இணைத்து திருத்தந்தை கூறியது இதுதான்:

"மிகவும் வறுமைப்பட்ட நிலையிலும், வேதனையானச் சூழலிலும், ஒருவர் இவ்வுலகின் அழகை உணர்கிறார் என்றால், அவர் ஆழ்மனதில் தன்னைப்பற்றிய மதிப்பை இழக்கவில்லை என்பதே அதன் பொருள். நீங்கள் வறுமைப்பட்டிருக்கிறீர்கள்; ஆனால், உங்கள் அடிப்படை மாண்பை இழந்த அடிமைகளாகவில்லை. எக்காரணம் கொண்டும் உங்கள் மாண்பை இழந்துவிடாதீர்கள்."

தான் வறுமையில் இருந்தாலும், தன்னைவிட மற்றொருவர் இன்னும் அதிகத் தேவையிலும், துன்பத்திலும் இருக்கிறார் என்பதை உணரும்போது, அவருக்கு உதவுவது பற்றி இராபர்ட் கூறியதை வைத்து, திருத்தந்தை தன் மூன்றாவது கருத்தை இவ்வாறு பகிர்ந்துகொண்டார்:

"வறுமை, ஒருவர் வாழ்வில் விளைவிக்கும் கனிகளில் ஒன்று, மற்றவருக்கு உறுதுணையாக இருக்கும் பண்பு. அதிக அளவு செல்வம் சேர்ந்துவிட்டால், அடுத்தவரைப் பற்றிய அக்கறை விடைபெற்று விடுகிறது. உங்கள் வறுமையின் நடுவிலும், நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கும் பண்பை, இந்த உலகிற்கு நீங்கள் சொல்லித்தர வேண்டும்" என்று திருத்தந்தை வறியோரிடம் கேட்டுக்கொண்டார்.

கிறிஸ்டியன் தன் பகிர்வில் அமைதி பற்றி பேசியது, திருத்தந்தையின் நான்காவது கருத்தாக அமைந்தது:

"உலகில் நிலவும் கொடூரமான வறுமை, போர். செல்வம் மிக்கவர்கள், இன்னும் அதிகப் பணம், அதிக அதிகாரம், அதிக நிலப்பரப்பு என சேர்ப்பதற்காகப் போர்களை உருவாக்குகின்றனர். வறியோர், வறுமையோடு போராடினாலும், அமைதியை உருவாக்கும் கலைஞர்களாக திகழ்கின்றனர்.

ஊரின் ஒதுக்குப்புறமாய், ஒரு மாடடைத் தொழுவத்தில், ஒதுக்கப்பட்ட ஒரு குடும்பத்தில், இவ்வுலகின் அமைதி பிறந்தது.

அமைதியை உருவாக்குங்கள்! அமைதிக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழுங்கள்! இவ்வுலகிற்கு அமைதி தேவை; திருஅவைக்கும், அனைத்து சபைகளுக்கும், அனைத்து மதங்களுக்கும் அமைதி தேவை."

வறியோர், இவ்வுலகிற்குச் சொல்லித்தரக் கூடிய நான்கு பாடங்களை இவ்விதம் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதியாக, தன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு, அரங்கத்தில் இருந்த அனைத்து வறியோரிடமும் மன்னிப்பு கேட்டார்:

"நான் என் வார்த்தையால் உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால், அல்லது, நான் சொல்லவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்ததை நான் சொல்லாமல் போயிருந்தால், என்னை மன்னித்து விடுங்கள். நற்செய்தியின் மையக்கருத்தாய் விளங்கும் வறுமையை வாசிக்காமல் இருக்கும் கிறிஸ்தவர்கள் சார்பாக உங்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். வறியோரைக் கண்டதும், தலையைத் திருப்பிக்கொண்டு செல்லும் கிறிஸ்தவர்கள் சார்பாக உங்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன்.

நீங்கள் அளிக்கும் மன்னிப்பு, திருஅவையில் உள்ள எங்கள் அனைவர் மீதும் நீங்கள் தெளிக்கும் புனித நீர். நீங்கள் வழங்கும் மன்னிப்பு என்ற நீரினால் நாங்கள் கழுவப்பெற்றால், வறியோரை மையப்படுத்திய திருஅவையை உருவாக்க உதவியாக இருக்கும். உலகின் அனைத்து மதங்களை சார்ந்தவர்களும், ஒவ்வொரு வறியவர் வழியாகவும் ஒரு முக்கியச் செய்தியை கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, நம் வாழ்வில் உடன்வரும் இறைவன், ஓர் ஏழையாகவே நம்மை நெருங்கிவருகிறார் என்ற உண்மையைக் கற்றுக்கொள்ள வேண்டும்."

சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோருடன் திருத்தந்தை மேற்கொண்ட இந்த மனம் திறந்த உரையாடலைத் தொடர்ந்து, திருத்தந்தையின் மீது கரங்களை வைத்து எளியோர் செபித்தது, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் பொருள் நிறைந்த உன்னதமானத் தருணம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டிலும், தொடரும் ஆண்டுகளிலும் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோர் நம் வாழ்வின் ஒரு முக்கியப் பங்காகவேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.