2016-11-15 14:57:00

இது இரக்கத்தின் காலம் : கனவு காண்பது பற்றி சொல்லித்தாருங்கள்


சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோர், அண்மையில், வத்திக்கானில், இரக்கத்தின் யூபிலியைக் கொண்டாட அழைப்பு பெற்றனர். நவம்பர் 11, வெள்ளிக்கிழமை, அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்தார். அவ்வேளையில், வறியோர் இவ்வுலகிற்குச் சொல்லித்தரக் கூடிய நான்கு பாடங்களைக் குறித்து, திருத்தந்தை மனம் திறந்து  பேசினார். வறியோர் இவ்வுலகிற்குச் சொல்லித்தரக் கூடிய முதல் பாடம், கனவு காணுதல். இதைக் குறித்து, திருத்தந்தை பகிர்ந்த கருத்துக்கள் இதோ:

"என்னைப் பொருத்தவரை, எவர் ஒருவர், கனவு காணும் சக்தியை இழக்கிறாரோ, அவர்தான் உண்மையான ஏழை. கூரை ஏதுமின்றி திறந்தவெளியில் படுத்திருக்கும் நீங்கள் கனவு காண்கிறீர்கள். அத்தகைய அனுபவம் எனக்கு இல்லை. ஆனால், நீங்கள் கனவு காண்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். உரோம் நகருக்குச் செல்லவேண்டும் என்று உங்களில் பலர் கனவு கண்டிருப்பீர்கள். இன்று அது நிறைவேறியுள்ளது. இந்த உலகம் மாறும் என்று கனவு காண்கிறீர்கள். அதுவும் நடக்கும் என்று நம்புங்கள்.

யாரால் கனவுகாண முடியும்? தேவையில் யார் இருக்கிறார்களோ, அவர்களால்தான் கனவுகாண முடியும். வாழ்வில் அனைத்தையும் அடைந்துள்ளவர்களால் கனவு காண முடியாது. மிக எளிய மக்கள், மனதில் கனவுகளைச் சுமந்து, இயேசுவைப் பின்தொடர்ந்தனர்.

எனவே, நான் உங்களுக்கு ஒரு விண்ணப்பத்தை முன்வைக்கிறேன். கனவு காண்பது எப்படி என்று எங்களுக்குச் சொல்லித்தாருங்கள். உறுதியான கூரைகளுக்குக் கீழ் படுத்துக்கொண்டு, உணவு, மருந்து என்பனவற்றில் தேவைகள் ஏதுமின்றி இருக்கும் எங்களுக்கு, கனவு காண்பது பற்றி சொல்லித் தாருங்கள். நற்செய்தியின் அடிப்படையில் கனவு காண்பது எப்படி என்று எங்களுக்குச் சொல்லித் தாருங்கள்."

எவ்விதம் கனவுகாண்பது, எத்தகைய கனவு காண்பது என்பனவற்றை வறியோரிடமிருந்து கற்றுக்கொள்ள முயல்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.