2016-11-14 15:46:00

வாரம் ஓர் அலசல் – எப்பொழுதும் பாதிக்கப்படுவோர் ஏழைகளே


நவ.14,2016. நவம்பர் 8, கடந்த செவ்வாய் பின்மாலைப்பொழுதில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ‘இனி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’என்று, திடீரென அறிவித்த செய்தியால், நாடெங்கும் அதிர்வலைகள். “நாளைக்கு பால் வாங்க, காய் வாங்க, மருந்து வாங்க காசிருக்கா’என்ற, வண்டி இழுக்கிறவர்கள், வீட்டுவேலை செய்யும் பெண்கள், காய்கறி விற்பவர்கள், பூ விற்கும் பெண்கள், விவசாயிகள், தொழிலாளிகள் என, சாமான்யரின் கவலைக் குரலே எங்கும் ஒலித்தது. ஓர் ஆட்டோ ஓட்டுநர், என்னிடம் 40 ரூபாய்தான் உள்ளது. சவாரி வந்தால்தான் இனி வரும் நாட்களை நகர்த்த முடியும். இந்த 40 ரூபாயை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒரு மாதத்துக்கு முன்னதாக அறிவித்துவிட்டு, செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்’’ என்று சொன்னார். ஓர் இல்லத்தரசி, “எனது கணவர்  குடிப்பழக்கம் உடையவர். இரண்டு  குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்குமுன் ஆட்டோவில் அடிப்பட்டு வேலைக்குப் போகாமல் வீட்டில்தான் உள்ளார். நான் வீட்டுவேலை செய்து வருகிறேன். என் மகனுக்கு கடந்த ஒரு வாரமாகக் காய்ச்சல். இந்த நிலையில் 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்துள்ளதாக கூறுகிறார்கள். காலையில் பால் வாங்க, காய் வாங்க, ஒரு ரூபாய் கூட இல்லை’’ என்று சொன்னார். மேலும், ஒரு குடும்பத் தலைவர், “நான் கிராமத்தில் இருக்கிறேன். நேற்று இரவுதான் பணம் எடுத்து வந்தேன். எடுத்த வந்த 3,000 ரூபாயும் 500 ரூபாய் நோட்டுகள். மீண்டும் டவுனுக்குப் போக வேண்டும் என்றால்கூட காசில்லை. யாரிடம் வாங்குவது என்று தெரியவில்லை” என்று சொன்னார்.

கறுப்புப் பணத்தை ஒழிக்க இதுவே சிறந்த வழி’என்று அரசியல் விமர்சகர்களில் ஒரு சாராரும், திரைப்பட பிரபலங்கள் சிலரும் புகழாரம் சூட்டிவந்தாலும், இந்த நடவடிக்கையால் கறுப்புப் பணத்தை முற்றிலும் ஒழிக்க முடியாது என்பதே பல சமூக ஆர்வலர்களின் கருத்து. சென்னைப் பல்கலைக்கழகப் பொருளாதாரப் பேராசிரியர் ஜோதி சிவஞானம் அவர்கள், விகடன் இதழிடம் இவ்வாறு பகிர்ந்து கொண்டிருக்கிறார்

“இது திடீரென்று எடுத்த முடிவு எனச் சொல்கிறார்கள். ஆனால், அது சாத்தியமில்லை. இதற்கான திட்டங்கள் முன்கூட்டியே உருவாக்கப்பட்டுத் தயாராக வைக்கப்பட்டு இருந்திருக்கும். இப்படியான அறிவிப்பின் வழியாக, பணத்தை தங்கள் வீடுகளில் பதுக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகள், கான்ட்ராக்டர்கள், அதிகாரிகள் போன்றவர்கள் மட்டுமே பாதிப்படைவார்கள். திட்டமிட்டு வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளவர்கள், சொத்துகளாக கறுப்புப் பணத்தைப் வைத்துள்ள பெரிய புள்ளிகள், ஆடிட்டர்களை வைத்து, பேலன்ஸ் ஷீட் தயாரித்து வைத்துள்ள பெரிய கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவர்களை, இந்த அறிவிப்பு எந்த விதத்திலும் பாதிக்காது. இதனால் ஏழை, நடுத்தர, சிறு வியாபாரிகள்தான் அதிக அளவில் பாதிப்படைவார்கள். நம்மிடம் இருக்கும் மொத்தப் பணத்தில் 14 விழுக்காடு மட்டும்தான் வெளியில் புழங்குகிறது. மற்றவை எல்லாம் சொத்துகளாக, பத்திரங்களாக, முதலீடுகளாக இருக்கின்றன. இவற்றில் இருக்கும் கறுப்புப் பணத்தைதான் ஒழிக்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால், இது மிகவும் குறைவான விழுக்காடுதான். தற்போது புழக்கத்தில் இருக்கும் நோட்டுகளில் 86 விழுக்காடு நோட்டுகள் 500, 1000 ரூபாய் நோட்டுகள்தான். இவற்றை தற்போது செல்லாது என அறிவித்து இருப்பதன் மூலம், மக்களுக்கு மிகுந்த சிரமங்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள். வெளியில் இருந்து பார்ப்பதற்கு மிகுந்த அறிவார்ந்த நடவடிக்கையாகப் பட்டாலும் உண்மையில் இதனால் பலன் இல்லை.

இத்தகைய கருத்துக்களையே பல சமூக ஆர்வலர்கள் முன்வைத்துள்ளார்கள். அரசுகளின் பல திட்டங்களில் அதிகம் பாதிக்கப்படுவது ஏழைகளே. எப்பவும் இடி ஏழைகளுக்குத்தான். அமெரிக்க ஐக்கிய நாட்டின் 45வது அரசுத்லைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் அவர்கள், அந்நாட்டின் CBS தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அமெரிக்க ஐக்கிய நாட்டில், உரிய ஆவணங்கள் இல்லாமல், சட்டவிரோதமாக தங்கி இருக்கும், ஏறக்குறைய முப்பது இலட்சம் பேரை வெளியேற்றுவேன் என்று கூறியுள்ளார். அமெரிக்கர் அல்லாத, குற்றக் கும்பல் உறுப்பினர்கள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் போன்றவர்களைக் கண்டுபிடித்து, நாட்டைவிட்டு வெளியேற்றுவோம் அல்லது கைது செய்து சிறையில் அடைப்போம். அதேபோல், அமெரிக்க-மெக்சிகோ எல்லைப் பகுதியில் உள்ள தடைச் சுவர், வேலிகளோடு உயர்த்தப்படும் என்றும், வருகிற சனவரி 20ம் தேதி பதவியேற்கும் டிரம்ப் அவர்கள் பேட்டியில் சொல்லியுள்ளார். இப்பேட்டி ஒளிபரப்பான இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள் யூபிலி விழா திருப்பலியை நிறைவேற்றியபோது, “சமுதாயத்தில், புறக்கணிக்கப்பட்டவர்கள் மற்றும் விளிம்புக்குத் தள்ளப்பட்டவர்கள் இல்லாததுபோல் நடிப்பது, கடவுளிடமிருந்து நம் முகத்தைத் திருப்பிக் கொள்வதாகும். நம்முடைய வெளித்தோற்றத்தைக் கண்டு அல்ல, மாறாக, நம் மனத்தாழ்மையைக் கண்டு, நம்மை அணுகிவரும் கடவுள், தாழ்மையும், மனம் வருந்துகின்ற மக்களையுமே நோக்குகிறார். இறைவனின் பிள்ளைகளாகிய நாம், இன்றைய உலகில் எண்ணற்ற அளவில் வாழும் ஏழை இலாசர்களை நோக்கி நம் பார்வையைத் திருப்புவோம்” என்று கூறினார்.

மேலும், “இயேசுவின் அன்பிலிருந்தும், இரக்கத்திலிருந்தும், எவரும், மாபெரும் பாவிகூட ஒதுக்கப்படுவதில்லை. அதனால், நம் வாழ்வில் நாம் சந்திப்பவர்களை அன்புகூர வேண்டும், ஏனென்றால், கடவுள் அவர்களை அன்புகூர்கிறார்” என்றும் திருத்தந்தை, சனிக்கிழமை யூபிலி மறைக்கல்வியுரையில் கூறினார். அன்பர்களே, அமெரிக்க ஐக்கிய நாட்டில், ஒருநாள், ஒரு நெடுஞ்சாலை ஓரமாக, ஒரு Mercedes-Benz கார் நின்றுகொண்டிருந்தது. பழுதான அதன் சக்கரத்தை மாட்ட முடியாமல், ஒரு பெண், தவிப்புடன், வழியில் செல்வோரிடம் உதவி கேட்டுக்கொண்டிருந்தார். எல்லாருமே வேகமாகச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச் சென்ற ஒருவர், அந்தப் பெண்ணுக்கு உதவச் சென்றார். தன்னைப் பார்த்து அந்தப் பெண் பயப்படுவதைப் புரிந்துகொண்டார் அவர். அதனால், அவர், கனிவான குரலில், “நான் உங்களுக்கு உதவி பண்ணத்தாம்மா வந்திருக்கேன். ஏன் இந்தக் குளிர்ல வெளியே நிக்கறீங்க? கார் உள்ளே போய் உட்காருங்க. நான் நொடியில ஸ்டெப்னி மாட்டித் தரேன்”னு சொல்லி, கிடுகிடுன்னு வேலை செய்து அதை மாட்டிக் கொடுத்தார். அந்த மனிதரின் உடம்பெல்லாம் அழுக்கு. முழங்கையில் இலேசாக சிராய்ப்பு. “ஓகேம்மா! வேலை முடிஞ்சுது. இனிமே நீங்க கிளம்பலாம்”னார். “உனக்கு எவ்வளவு பணம் தரவேண்டும்?”என, அந்தப் பெண் கேட்டார். எவ்வளவு கேட்டாலும், அந்தப் பெண் கொடுக்கத் தயாராக இருந்தார். ஆயினும், அந்த மனிதர், ஒரு புன்னகையோடு, “நான் மெக்கானிக் இல்லம்மா. இது என் தொழில் இல்லை. இது ஓர் உதவிதான். அதனால, எனக்கு எதுவும் வேண்டாம். நீங்கள் பத்திரமாகப் போங்கள் என்றதும், இல்லப்பா… நீங்கள் இந்த நடு வழியில் உதவி செய்யவில்லையென்றால் என் கதி என்னவோ, அதனால், எவ்ளோ வேணும்னு தயங்காம கேளு. கொடுக்கிறேன்” என்று அந்தப் பெண் சொன்னார். அதற்கு அவர், “அப்படின்னா ஒண்ணு பண்ணுங்க, மேடம். என் பேர் பிரெய்ன் ஆண்டர்சன். அடுத்த முறை உதவி தேவைப்படற யாரையாவது பார்த்தீங்கன்னா, அப்போ எனக்குக் கொடுக்க நினைக்கிற தொகையை அவங்களுக்குக் கொடுத்துட்டு, என்னை மனசுல நினைச்சுக்கோங்க. அது போதும்!”னு சிரிச்சுட்டு, வந்த வழியைப் பார்த்து சென்றுவிட்டார் பிரெய்ன்.

சில மைல் தூரம் போனதும், ஒரு சிறிய உணவகத்தில் காரை நிறுத்தி உணவருந்தச் சென்றார் அந்தப் பெண். அங்கு, ஒரு பணிப்பெண் வேகமாக வந்து, முகத்தைத் துடைக்க, முதலில் ஒரு துண்டைக் கொடுத்தார். சாப்பிட என்ன வேண்டும் எனக் கேட்டு, சுறுசுறுப்பாகப் பரிமாறினார். அந்தப் பணிப்பெண், எட்டுமாதக் கர்ப்பிணியாக இருந்துகொண்டு, முகத்தில் எவ்விதச் சோர்வுமின்றி, இப்படி வேலை செய்வதை இரசித்தார் அந்தப் பெண். சாப்பிட்டு முடிந்ததும், அவர் நூறு டாலர் கொடுத்தார். அதைக் கொடுக்கும்போது பிரெய்ன் ஆண்டர்சனை நினைத்துக் கொண்டார். அந்தப் பணிப்பெண், கட்டணத் தொகை போக, கல்லாவிலிருந்து மீதி சில்லறை வாங்கிக்கொண்டு வருவதற்குள், அந்தப்பெண் வெளியேறி, காரில் கிளம்பிப் போய்விட்டார்கள். ‘அடடா… மீதியை வாங்காமல் போயிட்டாங்களே!’ன்னு நினைத்துக் கொண்டே, மேஜையில் பார்த்தால், கைதுடைக்கும் துணிக்குக் கீழே, இன்னும் 400 டாலர் பணம் இருந்தது. கூடவே, ஒரு துண்டுச்சீட்டில், ‘மை டியர்! இந்தப் பணம் உனக்குத்தான். இந்தச் சமயத்தில் உனக்கு இது தேவைப்படலாம். மற்றபடி, நீ எனக்கு எதுவும் தரவேண்டியது இல்லை. ஒரு நெருக்கடியில், முகம் தெரியாத ஒருத்தர் எனக்கு உதவி செய்தார். அதன் தொடர்ச்சியாக, இப்போது உனக்கு நான் செய்திருக்கிறேன். ஒருவேளை, எனக்கு நீ ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், இந்த அன்புச் சங்கிலி அறுந்துவிடாமல், உதவி தேவைப்படும் வேறு ஒருவருக்கு உன்னால் முடிந்த உதவியைச் செய் என்று எழுதி வைத்திருந்தார்கள்..

அடுத்த மாதம் பிரசவச் செலவுக்கு என்ன செய்யவதென்று அந்தப் பணிப் பெண்ணும், அவர் கணவரும் அதிகமாகவே கவலைப்பட்ட நேரத்தில், இந்தப் பணம் அவர்களுக்குப் பெரிய உதவி! இரவு வீட்டுக்குப் போனதும், அந்தப் பணிப்பெண், தன் கணவரிடம் நடந்ததை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக விவரித்து, “எல்லாம் நல்லபடியா போயிட்டிருக்கு. கவலையை விடு, மை டியர் பிரெய்ன் ஆண்டர்சன்!”னு சொன்னாராம். ஸ்கேட்போர்ட் விளையாட்டில் புகழ்பெற்றவர்தான் பிரெய்ன் ஆன்டர்சன்(நன்றி : சக்தி விகடன்)

இந்த உண்மை நிகழ்வைக் கேட்கும்போது, உதவி தேவைப்படும் ஒருவருக்கு நாமும் உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதல்லவா? ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும் என்பார்கள். தக்க நேரத்தில், யாருக்கோ நாம் செய்த உதவி, நமக்கு உதவி தேவைப்படும்போது, வேறு யாரோ ஒருவர் வழியாகக் கிடைப்பதை நீங்கள் அனுபவித்திருக்கலாம். இரக்கத்தின் யூபிலி ஆண்டு நிறைவடையவுள்ளது. யூபிலி ஆண்டில், உலகளாவியத் திருஅவையில், திறக்கப்பட்டிருந்த ஏறக்குறைய எல்லாப் புனிதக் கதவுகளும், இச்சனி, இஞ்ஞாயிறு தினங்களில், மூடப்பட்டுவிட்டன. இந்த யூபிலி ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடங்கியுள்ள, இரக்கச்செயல் சங்கிலி அறுந்துவிடாமல் இருக்க கரம்கோர்ப்போம். நாம் உயிரோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்றால், யாரோ ஒருவர் நம்மீது காட்டும் அன்பினால்தான். எனவே, அன்பர்களே, எப்பவும் இடி ஏழைக்குத்தான் என்ற கூற்றை மாற்றியமைப்போம். தேவையில் இருப்போருக்கு, நம் இரக்கக் கரங்களை நீட்டுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.