2016-11-14 16:32:00

திருத்தந்தை : கடவுளும், அயலவருமே நம் பெரும் செல்வங்கள்


நவ.14,2016. சமுதாயத்தால் உரிமைகள் மறுக்கப்பட்டோர், மற்றும் ஒதுக்கப்பட்டோர் குறித்து அக்கறையற்று இருப்பது, கடவுளிடமிருந்து நம் பார்வையை திருப்பிக்கொள்வதற்கு ஈடாகும் என்று இஞ்ஞாயிறு திருப்பலியில் மறையுரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 11 முதல் 13 முடிய, வத்திக்கானில் நடைபெற்ற வறியோர், வீடற்றோர் மற்றும் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோர் ஆகியோரின் யூபிலி கொண்டாட்டங்களின் இறுதி நிகழ்வாக, இஞ்ஞாயிறு காலை 10 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.

நம்முடைய வெளித்தோற்றத்தைக் கண்டு அல்ல, மாறாக, நம் உளமனத் தாழ்ச்சியைக் கண்டு நம்மை அணுகிவரும் இறைவனின் பிள்ளைகளாகிய நாம், இன்றைய உலகில் எண்ணற்ற அளவில் வாழும் ஏழை இலாசர்களை நோக்கி நம் பார்வையைத் திருப்புவோம் என்று தன் மறையுரையில் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

கடவுளைப் பின்பற்றுவோர், அழிவைப் பறைசாற்றும் இறைவாக்கினர்களும், பல்வகை சோதிடர்களும் கூறும் அச்சம்தரும் போதனைகளுக்குச் செவிமடுக்க மாட்டார்கள் என்று வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனிடமிருந்தும், தீய சக்திகளிடமிருந்தும் வருவனவற்றை வேறுபடுத்திக் காண முடிந்தவர்களே, கடவுளின் மக்கள் என்று கூறினார்.

கடவுளையும், வறியோரையும் நம் வாழ்விலிருந்து ஒருநாளும் தள்ளிவைக்காமல் இருப்போம் என்று விண்ணப்பித்தத் திருத்தந்தை, கடவுளும், அயலவருமே நம் மிகப்பெரும் செல்வங்கள் என்ற உண்மை தெரிந்திருந்தாலும், இன்றைய உலகம், வறியோரை ஒதுக்கிவைத்தே வாழ்கிறது என்ற கவலையையும் வெளியிட்டார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.