2016-11-14 15:38:00

இது இரக்கத்தின் காலம்:தவறை உணர்வதே திருந்துவதற்குரிய முதல்..


பாலனும் பானுவும் அண்ணன் தங்கையர். பள்ளிக்கூட நேரம் போக, மற்ற நேரங்களில் பாலன், தோட்டத்தில் வளர்க்கப்பட்ட வாத்துகளைக் கவனித்து வந்தான், பானு, வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்வது, கடைக்குச் சென்று வருவது போன்ற வேலைகளைச் செய்து வந்தாள். ஒருநாள் பகலில், இருவரும் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். விளையாட்டுப் போக்கில் பாலன் எறிந்த கல், வாத்து ஒன்றின் மீது பட்டு அது இறந்துவிட்டது. அப்பாவுக்குத் தெரிந்தால் அடிவிழும் என்று அஞ்சிய பாலன், தோட்டத்தில் ஒரு குழியைத் தோண்டி அதில், அந்த வாத்தைப் போட்டுப் புதைத்துவிட்டான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த பானுவிடம், “அப்பாவிடம் சொல்லிவிடாதே பானு… உனக்காக நான் உன் வேலைகளில் எதைச் செய்யச் சொன்னாலும் செய்து தருகிறேன்’என்று கெஞ்சினான் பாலன். பானுவும் இதற்குச் சம்மதித்தாள். நாட்கள் நகர்ந்தன. வாத்து, வாத்து என்று சொல்லியே, பானு, தனது வேலைகளையெல்லாம் பாலனின் தலையில் கட்டி வந்தாள். பாலன் யோசிக்க ஆரம்பித்தான். ஒருநாள் மாலை… அப்பா முத்தையா வீட்டிலிருந்தார். அப்பா அருகில் சென்று, தயக்கத்துடன், “அப்பா, அன்றைக்கு ஒருநாள் விளையாடிக் கொண்டிருந்தபோது, நான் எறிந்த கல் பட்டு, நம்முடைய வாத்து ஒன்று இறந்து போய்விட்டது. அதை உங்களுக்குத் தெரியக்கூடாது என்ற எண்ணத்தில் புதைத்துவிட்டேன். நான் செய்தது தவறு என்று, இப்போது உணர்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள்’என்று கெஞ்சினான் பாலன். அப்பா, அவனை அணைத்துக் கொண்டு, “இதை நீ அன்றைக்கே என்னிடம் சொல்லியிருக்கலாமே! பரவாயில்லை… இனிமேல் இதுபோலத் தவறுகளைச் செய்ய நேரிட்டால், பெரியவர்களிடம் உடனே சொல்லி, மன்னிப்பு கேட்டுவிடு. அதுதான் நல்லது. இப்போது நீ போய் கவலையில்லாமல் விளையாடு. நீ தவறை உணர்ந்ததே பெரிய காரியம்’என்றார்.

தவறை உணர்வதே, திருந்துவதற்குரிய முதல் படி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.