2016-11-12 15:05:00

முதலில் சமுதாயம், பின்னர் கட்டடங்கள், கர்தினால் தாக்லே


நவ.12,2016. அண்மை மாதங்களில், மத்திய இத்தாலியில் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட இடங்களை, இவ்வெள்ளியன்று பார்வையிட்டார், உலக காரித்தாஸ் நிறுவனத் தலைவர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே.

கடந்த ஆகஸ்ட் 24ம் தேதியும், அக்டோபர் 26 மற்றும் 30ம் தேதிகளிலும் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்ற மணிலா பேராயர் கர்தினால் தாக்லே அவர்கள், உலக காரித்தாஸ் நிறுவனம், மணிலா உயர்மறைமாவட்டம் மற்றும் பிலிப்பீன்ஸ் திருஅவை பெயரால், தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்தார்.

மத்திய இத்தாலியின் நோர்ச்சா, வாலேரினா மற்றும் ஸ்பொலேத்தோ நகரங்களின் மக்களைச் சந்தித்த கர்தினால் தாக்லே அவர்கள், கிறிஸ்தவர்களாகிய நாம், முதலில், சமூகங்களைக் கட்டியெழுப்புவோம், மக்கள்மீது நம்பிக்கை வைப்போம், எல்லாவற்றையும் இழந்துள்ள மக்களின் குரல்களுக்குச் செவிமடுப்போம் என்று கேட்டுக்கொண்டார்.

சமூக ஒருமைப்பாடு, பிறரன்பு, கனிவு ஆகிய பண்புகள் கொண்ட சமுதாயத்தை முதலில் அமைப்போம், பின்னர் கட்டடங்களை எழுப்புவோம் என்றும் கூறினார்  கர்தினால் தாக்லே.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.