2016-11-12 14:49:00

பொதுக்காலம் - 33ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறு இது. அடுத்த ஞாயிறு கொண்டாடப்படும் கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று புனித பேதுரு பசிலிக்காவின் புனிதக் கதவு மூடப்படும். அத்துடன், இரக்கத்தின் சிறப்பு யூபிலி நிறைவுக்கு வரும். யூபிலி ஆண்டு நிறைவுற்றாலும், இரக்கம் நம் வாழ்வில் தொடரவேண்டும் என்பதை நினைவுறுத்த, யூபிலியின் இறுதி இரு வாரங்களில் வத்திக்கானில் இரு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்ற ஞாயிறு, சிறைப்பட்டோரின் யூபிலி, இந்த ஞாயிறு, சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோரின் யூபிலி.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு முழுவதும், இரக்கத்தின் நற்செய்தி என்று அழைக்கப்படும் லூக்கா நற்செய்தியிலிருந்து நாம் வாசித்த அற்புதப் பகுதிகள் வழியாக, இறைவன் நம்மை இரக்கச் சிந்தனைகளில் நிறைத்ததற்காக அவருக்கு நன்றி கூறுவோம்.

நற்செய்தியின் அற்புதப் பகுதிகள் என்று குறிப்பிட்டதும், எல்லாமே மனதிற்கு இதமானதைச் சொல்லும் பகுதிகள் என்று பொருள் கொள்ளக்கூடாது. நற்செய்தி என்றால், நல்லதைச் சொல்லும் செய்தி. அந்த நல்ல செய்தி, சில வேளைகளில், அச்சத்தையும், அதிர்ச்சியையும் உண்டாக்கும். நல்லவை நடக்கவேண்டும் என்ற ஆதங்கத்தோடு தரப்படும் எச்சரிக்கையும், நல்ல செய்திதானே!

எருசலேம் கோவிலின் அழிவைப் பற்றி இயேசு கூறும் வார்த்தைகளுடன், இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. இஸ்ரயேல் மக்களின் மதநம்பிக்கைக்கு உயிர்நாடியாக விளங்கிய எருசலேம் பேராலயத்தின் நடுவில் நின்றுகொண்டு, அந்தப் பேராலயம், கல்மேல் கல் இராதபடி இடிந்து தரைமட்டமாகும் என்று இயேசு கூறுகிறார். அவ்விதம் கூறுவதற்குத் தனிப்பட்ட ஒரு துணிவு வேண்டும். பின்வருவதை முன்கூட்டியே அறியும் அருள் இயேசுவுக்கு இருந்ததால், அவரால் இவ்வளவு துணிவுடன் பேச முடிந்ததென்று, நாம் விளக்கம் சொல்லலாம்.

ஆனால், அதேநேரம், தனிப்பட்ட ஒருவரது வாழ்வு போகின்ற திசை, அவர் நடந்து கொள்ளும் முறை இவற்றை வைத்து, அவர் வாழ்வு அழிவை நோக்கிப் போகிறதா அல்லது மகிழ்வை நோக்கிப் போகிறதா என்று கணிக்கமுடியும், இல்லையா? அதேபோல், ஒரு நிறுவனம் நடத்தப்படும் முறையை வைத்தும் அதன் எதிர்காலத்தைப் பற்றிக் கூறலாம். எருசலேம் கோவில், எவ்விதம் நிர்வகிக்கப்பட்டது என்பதை இயேசு ஆழமாய் உணர்ந்து, வெளிப்படுத்திய எண்ணங்களே, இன்றைய நற்செய்தியில் இடம்பெற்றுள்ளன.

இயேசுவைப் பொருத்தவரை, அவர் 12 வயதிலிருந்தே, எருசலேம் ஆலயத்தில் நிகழ்ந்தவற்றைக் கண்டு கவலைப்பட்டிருப்பார். அவரது கவலை, ஆதங்கம் இவற்றை ஒரு சாட்டையாகப் பின்னி, அந்த ஆலயத்தை அவர் தூய்மைப்படுத்தினார். (லூக்கா 19: 45-46) அதற்குப் பின்னும், அந்த ஆலயம், மீண்டும் தன் பழைய வியாபார நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்ததைப் பார்த்த இயேசு, இவ்வளவு தூரம் வருமானம் சேர்க்கும் அக்கோவில், நிச்சயம் பிற நாட்டவரின் பொறாமைப் பார்வையில் படும். அக்கோவில் சேர்த்துள்ள செல்வமே, அதன் அழிவுக்குக் காரணமாய் இருக்கும் என்பதை, சொல்லாமல் சொல்லும் வண்ணம், இயேசு, இந்த எச்சரிக்கை வார்த்தைகளைச் சொல்லியிருக்க வேண்டும்.

செல்வம் சேர்க்கும் நிறுவனங்களாக மாறும் கோவில்கள், கற்களால் எழுப்பப்படும் கோட்டைகளாக மாறிவிடுகின்றன. கோவிலில் உள்ள கடவுளைக் காப்பதைவிட, செல்வத்தைக் காப்பதற்காக வலுவானக் கற்சுவர்களை அமைத்துக்கொள்கின்றன. கற்களை நம்பி உயர்ந்து நிற்கும் கோவில்களுக்குப் பதில், மக்களை நம்பி எழுப்பப்படும் உண்மை ஆலயங்களை, அனைத்து மதங்களும் கட்டவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.

முதல் இரு இறைச்சொற்றொடர்களில், எருசலேம் கோவிலின் அழிவுபற்றி பேசும் இயேசு, அதன் பின், உலகில் நிகழப்போகும் அழிவுகளைப்பற்றி கூறியுள்ளார். அவர் பட்டியலிடும் அவலங்களை அலசினால், ஏதோ நாம் வாழும் இக்காலத்தைப்பற்றி இயேசு பேசுவது போல் தெரிகிறது. இதோ, இயேசு கூறும் அந்த அவலங்கள்:

கடவுளின் பெயரால், உலகம் அழியப்போகிறது என்ற பயத்தால், மக்களை வழிமாறிப் போகச்செய்தல்;
போர் முழக்கங்கள், குழப்பங்கள், ஒன்றை ஒன்று எதிர்த்து எழும் நாடுகள்;
பெரிய நில நடுக்கங்கள், பஞ்சம், கொள்ளை நோய்;
அச்சுறுத்தும் அடையாளங்கள் வானில் தோன்றுதல்…

இவை அனைத்தும், நாம் வாழும் காலத்திலும் நம்மைச்சுற்றி நடப்பதை நாம் பார்த்து வருகிறோம். இந்த அவலங்களுக்கு, அழிவுகளுக்கு மத்தியில், கலங்காமல் இருங்கள் என்று இயேசு கூறுவது, நமக்கு விடுக்கப்படும் பெரும் சவால்!

இயற்கையிலும், சமுதாயத்திலும் நடக்கும் இந்த பயங்கரங்களைக் கூறிவிட்டு, பின்னர் நமது தனிப்பட்ட வாழ்வை, குறிப்பாக, தம்மைப் பின்பற்றுகிறவர்களின் வாழ்வை  வெளிச்சம்போட்டுக் காட்டுகிறார், இயேசு. அங்கும், அவர் சொல்பவை, அச்சத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தும் ஒரு பட்டியல்தான்.

நீங்கள் விசாரணைகளுக்கு இழுத்துச் செல்லப்படுவீர்கள்;
உங்கள் குடும்பத்தினரே உங்களைக் காட்டிக் கொடுப்பார்கள்;
உங்களுக்கு எதிராகச் சான்று பகர்வார்கள்;
உங்களுள் சிலரைக் கொல்வார்கள்;
என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்…

இயேசு கூறும் இத்தகையத் துன்பங்களை தங்கள் வாழ்வில் ஒவ்வொருநாளும் சந்திக்கும் பல கிறிஸ்தவர்களைப் பற்றி அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன. கிறிஸ்துவுக்காக வன்முறைகளைச் சந்திக்கும் இவர்களுக்காக இன்று சிறப்பாக செபிப்போம்.

இயேசு இன்றைய நற்செய்தியில் கூறிய இந்த அழிவுகளைக் கேட்கும்போது, இது என்ன நற்செய்தியா என்றுகூட கேட்கத் தோன்றுகிறது. மீண்டும் நினைவில் கொள்வோம். நற்செய்தி என்றால், இனிப்பான செய்தி அல்ல. நமக்குள் வளரும் ஒரு நோயை நமக்குச் சுட்டிக்காட்டும் மருத்துவரை எதிரி என்றா நாம் கூறுகிறோம்? கசப்பான மருந்துகளைத் தரும் அவரை, நன்மை செய்பவர் என்று நாம் நம்புவதில்லையா? அதேபோல், இயேசுவும், இவ்வுலகைப் பற்றிய கசப்பான உணமைகளைச் சொல்கிறார். முக்கியமாக, தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு வரவிருக்கும் சவால்களை, ஒளிவு மறைவு இல்லாமல் தெளிவாக்குகிறார். தனக்குச் சீடர்கள் வேண்டும், தன்னைச் சுற்றி எப்போதும் கூட்டம் இருக்கவேண்டும் என்று அவர் நினைத்திருந்தால், கசப்பான உண்மைகளைச் சொல்லத் தேவையில்லையே!

இத்தனைப் பிரச்சனைகளின் மத்தியிலும் இயேசு தரும் ஒரே வாக்குறுதி, அவரது பிரசன்னம். அழிவுகளையும், குழப்பங்களையும் பட்டியலிட்ட இயேசு, இறுதியில், அறுதல் தரும் வார்த்தைகளுடன் நிறைவு செய்கிறார். “நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்.” இயேசு கூறும் ‘உங்கள் வாழ்வு’ இவ்வுலக வாழ்வு அல்ல. மறு உலக வாழ்வு.

நாம் எல்லாருமே ஒருநாள் இவ்வுலகிலிருந்து விடைபெற வேண்டும். ஆனால், அது எப்போது என்பது மட்டும் யாருக்கும் தெரியாது. ஒரு சிலருக்கு, மறுவுலக வாழ்வு நெருங்கிவருகிறது என்ற உண்மை, அவர்களுக்கு வரும் நோயால் உணர்த்தப்படுகிறது. அவ்வேளையில், அவர்களில் ஒரு சிலர் மிகுந்த தெளிவுடன் இவ்வுலக வாழ்வைக் குறித்து உன்னதமான உண்மைகளைக் கூறியுள்ளனர். மறுவுலக வாழ்வுக்கு நாள் குறிக்கப்பட்ட Randy Pausch என்ற பேராசிரியர், இறப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன், தன் பல்கலைக் கழகத்தில் புதிதாகப் பட்டம் பெற்ற இளையோருக்கு வழங்கிய ஓர் உரையைக் கேட்கும் வாய்ப்பு பெற்றேன். அதில் அவர் கூறுவது இதுதான்:

“உங்கள் வாழ்வில் ஆழ்ந்த தாகத்தோடு கனவுகளைத் துரத்துங்கள். கனவுகளைத் துரத்துவதற்கு முன், அவை எப்படிப்பட்ட கனவுகள் என்பதைத் தீர்மானம் செய்யுங்கள். பொருளும், புகழும் சேர்க்கும் கனவுகளைத் துரத்தவேண்டாம். நீங்கள் எவ்வளவுதான் பொருள் சேர்த்தாலும், உங்களை விட வேறொருவர் இன்னும் அதிகப் பொருள் சேர்த்திருப்பார்; அது உங்களை மீண்டும் ஏக்கத்தில் விட்டுவிடும். உறவுகளைச் சேகரிக்கும் கனவுகளைத் துரத்துங்கள். உண்மையான உறவுகள், ஏக்கம் தராது. நிறைவைத் தரும்."

பணம், புகழ் என்ற சக்திகள், தாங்கள் அழிவதோடு, இவ்வுலகையும் அழித்து வருகின்றன. இந்த சக்திகளோடு உறவு கொள்வதற்குப் பதில், மனித உறவுகள் என்ற சக்தியைத் தேடிச் செல்வோம். அந்த உறவுகளுக்கெல்லாம் சிகரமாக, இறைவனின் உறவும் நம்முடன் உள்ளதென்ற நம்பிக்கையோடு, உலகப் பயணத்தை, வாழ்வின் முடிவை, உலகத்தின் முடிவை எதிர்கொள்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.