2016-11-12 14:40:00

இது இரக்கத்தின் காலம் – உலக முடிவு, இரசிக்கும் கேளிக்கையா?


தத்துவ இயல் மேதைகளில் ஒருவரான சோரென் கீர்க்ககார்ட் (Søren Kierkegaard) அவர்கள், நாடக அரங்கத்தை மையமாக வைத்து, ஓர் உவமை கூறியுள்ளார்.

ஓர் அரங்கத்தில், அலைமோதும் கூட்டத்தின் நடுவே நாடகம் அரங்கேறி வருகிறது. அடுத்தடுத்து வரும் காட்சிகள், விறுவிறுப்பாக இருப்பதால், மக்கள் தொடர்ந்து, ஆரவாரமாய், கைதட்டி இரசிக்கின்றனர்.

அவ்வேளையில், திடீரென, திரைக்குப் பின்புறமிருந்து மேடைக்கு ஓடிவரும் கோமாளி, "மக்களே, அவசரமான ஓர் அறிவிப்பு... மேடையின் பின்புறத்தில் தீப்பிடித்துள்ளது. எனவே, தயவுசெய்து, விரைவாக இங்கிருந்து வெளியேறுங்கள்" என்று கத்துகிறார்.

அவர் அப்படி கத்துவதை, நாடகத்தின் நகைச்சுவைப் பகுதி என்று மக்கள் கருதி, ஆரவாரமாய் கைதட்டி இரசிக்கின்றனர். கோமாளியோ, கரங்களைக் கூப்பி, கண்களில் கண்ணீர் வழிய, மேடையில் முழந்தாள் படியிட்டு, "தயவுசெய்து வெளியேறுங்கள்" என்று கெஞ்சுகிறார். ஆனால், அவர் அற்புதமாக நடிக்கிறார் என்று கூட்டம் பாராட்டுகிறது. திடீரென, அந்த அரங்கம் முழுவதும் தீயால் சூழ்ந்து, அனைவரும் தீக்கிரையாகின்றனர்.

"உலக முடிவும் இதுபோல்தான் இருக்கும். அந்த உண்மையை ஒரு வேடிக்கை என்று எண்ணி கரவொலி எழுப்பிக்கொண்டிருக்கும் வேளையில், இவ்வுலகம் முடியும்" என்று கீர்க்ககார்ட் அவர்கள், தன் உவமையை நிறைவு செய்துள்ளார்.

வாழ்வில் பல வேளைகளில், பல வடிவங்களில் வந்தடையும் எச்சரிக்கைகளில் கவனம் செலுத்தாமல், அனைத்தையும் விளையாட்டாக இரசித்துக் கொண்டிருப்பவர்களில், நாமும் ஒருவரெனில், இரக்கத்தின் காலம் மீண்டும் ஒருமுறை, நம்மை விழித்தெழச் செய்யட்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.