2016-11-11 15:41:00

பிரிக்கும் சுவர்களை தகர்த்து, பாலங்களைக் கட்ட வேண்டும்


நவ.11,2016. தனிப்பட்ட அரசியல்வாதிகளை, நான் தீர்ப்பிடுவதில்லை, மாறாக, அவர்களின் கொள்கைகள், ஏழைகளையும், சமுதாயத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டவர்களையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதைத்தான் நான் பார்க்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ள இச்சூழலில், இத்தாலிய 'La Repubblica' தினத்தாளின் Eugenio Scalfari அவர்களுக்குப் பேட்டியளித்த திருத்தந்தை, தனது கவலையெல்லாம், புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் குடிபெயர்ந்தவர்களைப் பற்றியதாகவே உள்ளது என்று கூறினார்.

வறுமை மற்றும் போர்களால் மக்கள் புலம்பெயருவது ஒருபுறமிருக்க, பணக்கார நாடுகளிலும், ஏராளமான ஏழை மக்கள் உள்ளனர், மேலும், இந்நாடுகள், புதிதாக வருகைதரும் புலம்பெயர்ந்தவர்கள் குறித்து அச்சம் கொள்கின்றன என்றும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சமத்துவமற்ற சுவர்களை இடித்து, பாலங்களைக் கட்டுவதன் வழியாக, அனைவருக்கும் அதிகச் சுதந்திரமும், மனித உரிமைகளும் கிடைப்பதற்கு வழியமைக்க முடியும் என்றுரைத்த திருத்தந்தை, இன்றைய உலகில், மிகப்பெரிய தீமை, சமத்துவமின்மையே என்றும் கூறினார்.    

மார்ட்டின் லூத்தர் கிங் அவர்களின் குடியுரிமை போராட்டத்தை வியப்புடன் பேசிய அதேவேளை, வெறுப்பையும், தீமையையும், தகர்க்க முடிந்த ஒரே கருவி அன்பு என்றும் கூறிய திருத்தந்தை, இன்றைய உலகிலுள்ள ஏறக்குறைய 250 கோடிக் கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, தங்களின் விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.