2016-11-11 15:45:00

நலவாழ்வு, மனிதரின் அடிப்படை உரிமை, பேராயர் யூர்கோவிச்


நவ.11,2016. அறிவுசார்ந்த சொத்துக்கள் பற்றிய விவாதங்கள் நடைபெறும்போது, நலவாழ்வு வசதிகளுக்கு உறுதியளிக்கப்பட வேண்டியது அவசியம் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், உலகக் கூட்டம் ஒன்றில் கூறினார்.

அறிவுசார்ந்த சொத்துக்கள் உரிமை குறித்து, WTO என்ற உலக வர்த்தக நிறுவனம், ஜெனீவாவில் நடத்திய ஓர் கலந்துரையாடலில் உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும் பிற உலக நிறுவனங்களின் திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் இவான் யூர்கோவிச் அவர்கள், இவ்வாறு கூறினார்.

நம் அனைவருக்கும் தெரிந்திருப்பது போன்று, நலவாழ்வு, மனிதரின் அடிப்படை உரிமை என்றும், மற்ற உரிமைகளைச் செயல்படுத்துவதற்கும், மாண்புடன் வாழ்வதற்கும் இது முக்கியம் என்றும் எடுத்துச் சொன்னார் பேராயர் யூர்கோவிச்.

பொருளாதார, சமூக, கலாச்சார, சமய மற்றும் அரசியல் சூழல்கள் எத்தகையதாய் இருந்தாலும், நாடுகள், தங்களின் தேசியக் கொள்கைகள் மற்றும் திட்டங்களில், நலவாழ்வு உரிமையை, அடிப்படை குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும்,  பேராயர் யூர்கோவிச் அவர்கள் வலியுறுத்தினார்.  

எனினும், உயர்தர மருத்துவ வசதிகள், மருந்துகள் போன்றவற்றால், உலகில், இலட்சக்கணக்கான மக்கள், நலவாழ்வு உரிமையை, முழுமையாக இன்னும் அனுபவிக்கவில்லை என்ற கவலையையும் வெளியிட்டார் பேராயர் யூர்கோவிச்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.